சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் நடிப்பில் நாளை (பிப்.06) வெளியாகவிருக்கும் 'விடாமுயற்சி' திரைப்படம் முன்பதிவில் பட்டைய கிளப்பி வருகிறது. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமாருடன் த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.
இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடாமுயற்சி திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல்வேறு பிரச்சனைகளின் காரணமாக ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் 'விடாமுயற்சி' திரைப்படமானது நாளை (பிப்.06) திரையரங்குகளில் வெளியாகிறது.
கடந்த 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான 'துணிவு' திரைப்படத்திற்கு பிறகு இரண்டு வருடங்கள் கழித்து வெளியாகும் அஜித்தின் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் 'விடாமுயற்சி' படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு தொடங்கியதில் இருந்து இப்போது வரை நல்ல வசூலை பெற்று வருகிறது ‘விடாமுயற்சி’ திரைப்படம். தமிழகத்தில் திரையிடப்பட்ட காட்சிகளில் பெரும்பாலானவை ஹவுஸ் ஃபுல்லாகியுள்ளது.
சால்க்னிக் இணையதளத்தின்படி விடாமுயற்சி திரைப்படமானது முதல் நாள் காட்சிகளுக்கான முன்பதிவில் மட்டும் உலகளவில் ஏறக்குறைய 15 கோடி வரை வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ஏறக்குறைய 12 கோடி வரை முன்பதிவில் வசூல் செய்துள்ளது. ஒருவேளை இந்த பொங்கலுக்கு ரிலீஸாகி இருந்தால் இந்த வசூல் இன்னும் அதிகமாகி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
ஏனென்றால் கடந்த ஆண்டு வெளியான விஜய்யின் தி கோட் திரைப்படம் முன்பதிவில் தமிழ்நாட்டில் மட்டுமே 15 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இன்னும் ஒரு நாள் இருப்பதால் இந்த சாதனையை முறியடிக்க நிறைய வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
முன்பதிவை சேர்த்து ஒட்டுமொத்தமாக முதல் நாளில் 34 கோடிக்கும் அதிகமாக விடாமுயற்சி தமிழ்நாட்டில் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் ’தி கோட்’ திரைப்படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் 31 கோடி மட்டுமே வசூலித்திருந்தது. ’பீஸ்ட்’ திரைப்படம் முதல் நாளில் மட்டும் தமிழ்நாட்டிற்குள் 35 கோடிக்கும் மேலாக வசூல் செய்துள்ளது.
இதையும் படிங்க: விக்ராந்த், சோனியா அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள ’வில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
மேலும் விடாமுயற்சி திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், பிப்ரவரி 6 மற்றும் 7 ஆகிய இரண்டு நாட்களுக்கு மட்டும் கூடுதலாக ஒரு சிறப்புக் காட்சியினை காலை 9 மணிக்கு திரையிட அனுமதி படக்குழு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
#BREAKING : #VidaaMuyarchi 9 AM Shows GO Issued pic.twitter.com/NPHIrRPCJf
— Ramesh Bala (@rameshlaus) February 5, 2025
அதனை பரிசீலித்து படம் வெளியாகும் 6ஆம் தேதி மட்டும் ஒருநாள் சிறப்புக் காட்சி திரையிட அனுமதியளிக்கப்படுகிறது. அதன்படி முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி கடைசி காட்சி இரவு 2 மணி வரை (ஒரு நாளைக்கு 5 காட்சிகள் மட்டும்) திரையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்புக் காட்சிக்கு அனுமதி கிடைத்ததை அஜித்குமார் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.