தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"2K கிட்ஸ்களுக்கு பிடித்த படமாக ஹரா இருக்கும்" - நடிகர் மோகன் நம்பிக்கை! - actor mohan HARA movie - ACTOR MOHAN HARA MOVIE

HARA: இயக்குநர் விஜய் ஶ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகி உள்ள ஹரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இந்தப் படம் 2K கிட்ஸ்களுக்கு பிடித்த படமாக இருக்கும் எனவும், நேர்மையாக, உண்மையாக ஒரு படத்தை உருவாக்கினால் எந்த காலத்திலும் வியாபாரம் இருக்கும் எனவும் நடிகர் மோகன் பேசினார்.

ஹரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் மோகன்
ஹரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் மோகன் (photo credit to ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 11, 2024, 9:44 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர், நடிகர் மோகன். இவரது நடிப்பில் உருவாகி உள்ள ஹரா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இப்படத்தை கோயம்புத்தூர் எஸ்.பி.மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஶ்ரீ விஜய் தயாரித்துள்ளனர். இப்படத்தை ஜூன் 7ஆம் தேதி எல்மா பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

இந்நிகழ்வில் நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் பேசியதாவது, "இனிய நண்பர் மோகனின் ஹரா படத்தின் இசை விழாவைக் கொண்டாடுகிறார்கள். ரசிகர்கள் இங்கே குடியிருப்பது சந்தோஷம். மோகனுக்கும் எனக்கும் ரசிகர்களாகிய நீங்கள் தான் கடவுள். மோகன் பற்றி யாருக்கும் தெரியாத ஒரு விஷயம் ஒன்று உள்ளது.

சினிமாவுக்கென சில பழக்கங்கள் இருக்கும், சம்பிரதாயங்கள் இருக்கும். ஆனால், அதில் எதிலும் மோகன் கலந்துகொள்ள மாட்டார். எப்போதும் தன் வேலையில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருப்பார். இன்றும் பாருங்கள், அவர் உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்.

பாடல்கள் தான் அவரது பலம், இளையராஜா முதல் டி.ஆர் வரை பலர் இசையில் அவர் பாடல்கள் வெற்றி பெற்றுள்ளன. எத்தனையோ இசையமைப்பாளர்கள் இசையில் எத்தனையோ பேர் நடித்திருந்தாலும், மோகன் நடிக்கும் போது மட்டுமே பாடலை அவரே பாடுவது போல் இருக்கும்.

இந்த குணத்தை நான் நடிகர் திலகம் சிவாஜியிடம் பார்த்திருக்கிறேன், ஒரு இந்தி நடிகரிடமும் பார்த்திருக்கிறேன். அவர்களுக்குப் பிறகு மோகன் தான் அதில் தன்னை நிரூபித்துள்ளார். இயக்குநர் விஜய் ஶ்ரீ ஜி வித்தியாசமான படங்கள் செய்து வருகிறார். சாருஹாசனை நாயகனாக்கி ஜெயித்தவர், நிகிலை நாயகனாக்கினார்.

இப்போது மோகனை மீண்டும் திரைக்குக் கொண்டு வந்துள்ளார். இந்தப் பாடல்களைப் பார்க்கும் போது படத்தில் மோகன் பட்டையைக் கிளப்புவார் எனத் தெரிகிறது. மோகனுக்கு கண்டிப்பாக இப்படம் திருப்புமுனைப் படமாக இருக்கும். இந்த இசை விழா போல இந்தப் படத்தின் வெற்றி விழாவும் மிக பிரமாண்டமாக நடக்கும். அனைவருக்கும் என் வாழ்த்துகள்" என்றார்.

இயக்குநர் விஜய் ஶ்ரீ ஜி பேசியதாவது,"இந்த விழா இவ்வளவு சிறப்பாக நடக்கக் காரணம் மோகன் ரசிகர்கள் தான். அனைவருக்கும் என் நன்றிகள். இந்தப் படம் எதைப் பற்றி பேசுகிறது என்பது அடுத்த சில மாதங்களில் ரசிகர்களுக்குத் தெரிந்துவிடும்.

இந்தப் படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களும் தங்கள் உயிரைத் தந்து முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி உள்ளனர். இந்தப் படத்திற்காக யாரைக் கூட்டி வந்தாலும், மோகன் பிரபலமானவர்களா என்றெல்லாம் பார்க்க மாட்டார். அவர்களின் திறமையை மட்டுமே பார்ப்பார்.

இந்தப் பாடல்கள் எல்லாம் கடினமான சூழ்நிலைகளுக்கு இடையில் தான் உருவானது. இந்தப் படம் அவரை வேறு மாதிரியாகக் காட்டும். நான் விபத்திலிருந்து திரும்பி வந்ததே அவரால் தான். விபத்துக்குப் பிறகு எனக்காக ஒரு ஷெட்யூல் ரெடி செய்தார். அந்த மனது அவருக்குத் தான் வரும். முழுக்க முழுக்க எனக்காக அதைச் செய்தார்.

மோகன் சாரின் வெற்றிக்கு காரணம் அவரது நடிப்பு தான், அதை திரும்ப ரசிகர்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டுமென்று நினைத்து தான் இப்படத்தை எடுத்தேன். ஹரா வெல்லும், அதற்கு மிகப்பெரிய காரணம் மோகன் ரசிகர்கள் தான். அனைவருக்கும் நன்றி" என்று பேசினார்.

நடிகர் மோகன் பேசியதாவது, "எத்தனை தடவை ரசிகர்களுக்கு நன்றி சொல்வது எனத் தெரியவில்லை. உங்களுக்கு நான் காலமெல்லாம் கடன்பட்டிருக்கிறேன். நான் நடித்தாலும், இல்லையென்றாலும் என் மீது அன்பு செலுத்தும் என் ரசிகர்களுக்கு நன்றி. ஏன் நடிக்கவில்லை என பலரும் கேட்கிறார்கள். என்னைத் தெரிந்தவர்களுக்கு தெரியும், எனக்குக் கதை பிடித்தால் மட்டுமே நான் நடிப்பேன்.

விஜய் ஶ்ரீ ஜி 7 முறை கதையைத் திருத்திய பிறகு தான் இந்தப் படத்தை நான் ஒத்துக் கொண்டேன். இந்தப் படத்திற்கு கோவை மக்கள் கொடுத்த ஒத்துழைப்பு வியப்புக்குரியது, அத்தனை மக்களுக்கும் எங்களது நன்றி. இன்றைய 2கே கிட்ஸ் முதல் அனைவருக்கும் பிடிக்கும்படி விஜய் ஶ்ரீ ஜி படத்தை உருவாக்கியுள்ளார். இன்றைய நாயகன் இசையமைப்பாளர் ரஷாந்த் அர்வின். அருமையான பாடல்களை அவர் தந்துள்ளார். மகளைப் பற்றிய பாடல் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.

நேர்மையாக, உண்மையாக ஒரு படத்தை உருவாக்கினால், எந்த காலத்திலும் வியாபாரம் இருக்கும் என்பதை இப்படம் நிரூபித்துள்ளது. டீசர் பார்த்துப் படத்தை வாங்க கோவை பிரதர்ஸ் முன் வந்துள்ளார்கள். மிகவும் பெருமையாக உள்ளது. உங்கள் ஆசீர்வாதத்தில் இந்தப்படம் ஜூன் 7ஆம் தேதி திரைக்கு வரும். கோவை பிரதர்ஸ் இப்படத்தை விநியோகிக்கிறார்கள். இந்தப் படம் எல்லோரையும் திருப்திபடுத்தும் விதத்தில் இருக்கும், நன்றி" என்று பேசினார்.

இதையும் படிங்க:ஜீவி வெற்றி - பிரபு காம்போவில் உருவாகும் ‘ஆண்மகன்’! - Actors Vetri Prabhu Combo Aanmagan

ABOUT THE AUTHOR

...view details