நெய்வேலி:நடிகை திரிஷா குறித்து அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூ வெளியிட்ட அவதூறு கருத்துக்கு நடிகர் மன்சூர் அலிகான் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது குறித்து மன்சூர் அலிகான் வெளியிட்டு உள்ள ஆடியோ பதிவில், அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூ வெளியிட்ட கருத்து அருவருக்கத்தக்க வகையில் உள்ளதாகவும், சினிமா துறையில் உள்ள சக நடிகை பற்றி ஒருவர் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் சுயலாபத்திற்காக இந்த கருத்தை வெளியிட்ட அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூ வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளார்.
கவுரமாக நடத்தப்படும் நடிகைகள் குறித்து அதிமுக முன்னாள் நிர்வாகி வெளியிட்ட பேச்சுகள் மிகவும் ஆபத்தானவை, அருவருக்கத்தக்கவை என்றும் சமுதாயத்தை பாதிக்கக் கூடிய வகையில் அவரது கருத்துகள் உள்ளதால் உரியவர்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மன்சூர் அலிகான் அந்த ஆடியோ பதிவில் தெரிவித்து உள்ளார்.
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் வெளியிட்ட அவதூறு கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அதேபோல், நடிகை திரிஷா குறித்து அதிமுக முன்னாள் நிர்வாகி வெளியிட்ட கருத்துக்கு பல்வேறு திரைத் துறையினரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.