சென்னை: மைக்கேல் கே ராஜா இயக்கத்தில் விமல், கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'போகுமிடம் வெகுதூரமில்லை'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (மே 19) சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர்கள் விமல், கருணாஸ், அருள்தாஸ், தயாரிப்பாளர் தேனப்பன் மற்றும் பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது இந்த விழாவில் கலந்துகொண்ட சினேகன் பேசும்போது, "இப்படத்தின் தலைப்பு எனக்கு பிடித்திருக்கிறது. மிகப்பெரிய வாழ்வியல் அடங்கியிருக்கிறது. தலைப்புக்குள் கதையை இயக்குநர் வைத்திருக்கிறார். கலைக்கு மொழி தேவையில்லை. அன்பும் காதலும் இருந்தால் போதும் கலை அழகாக வளர்ந்து கொண்டு இருக்கிறது.
நடிகர் விமல் மற்றும் இப்படத்தின் இசை அமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தன் இருவரும் தொடர்ந்து நல்ல கதைகளை பண்ணிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால், இருவரின் தூரம் இது அல்ல; அவர்கள் எங்கு சறுக்குகிறார்கள் என்று தெரியவில்லை.
ரகுநந்தன் போல 'மெலோடி கிங்' பார்த்தது இல்லை. நான் வெகுதூரமாக கமலிடம் பயணப்பட்டு வருகிறேன். உத்தம வில்லன் படத்தில் அந்த ஒப்பந்தத்தில் என்ன நடந்தது? என்று எனக்குத் தெரியாது. ஆனால், ஒற்றை வார்த்தை திரையுலகிற்கு சொல்லிக் கொள்கிறேன். கமலைக் குறை சொல்லுகிற அளவுக்கு நீங்கள் யாரும் புத்தனில்லை" எனத் தெரிவித்தார்.
பின்னர் பேசிய நடிகர் கருணாஸ், "நான் சினிமாவில் எந்த ஹீரோ கூட முதல் படம் நடித்தாலும் அது கவனிக்கத்தக்க படமாக இருந்துள்ளது. அஜித்துடன் 'வில்லன்', விஜய்யுடன் 'திருமலை' என எனக்கும் அந்த படத்துக்கும் ஹெல்த்தியாக அமைந்துள்ளது. இப்படத்தின் கதையைக் கேட்டுவிட்டு எனக்குப் பெயர் சொல்லும் படமாக இது இருக்கும் என்று எனது குடும்பத்திடம் சொன்னேன்.
நானும் கரோனாவில் அடிபட்டவன்தான். திண்டுக்கல்லில் ஹோட்டல் தொடங்கி 2 கோடி ரூபாய் போய்விட்டது. ஒரு படத்தில் ஒரு கதாபாத்திரம் நாம்தான் நடிக்க வேண்டும் என்று விதி இருந்தால் யாராலும் மாற்ற முடியாது. நான் இன்னும் வீடு கட்டவில்லை என்று என் மனைவி சொல்வார். அதற்கு, ஆளுநர் மாளிகையை கருணாஸ் வாங்க வேண்டும் என்று விதி இருந்தால் அது நடக்கும் என்று நான் சொல்வேன். ஆகவே, எந்த ஒரு வேலையிலும் நாம் உண்மையாக இருந்தால் அதற்கான ஊதியம் நிச்சயம் கிடைக்கும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:"காமெடியனாக வாய்ப்புகள் வரவில்லை" - நடிகர் சூரி வேதனை!