சென்னை:இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான படம் 'இந்தியன்'. கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். லஞ்சத்திற்கு எதிராக போராடும் ஒரு முதியவரின் கதையாக இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. 28 வருடங்களுக்கு பிறகு தற்போது 'இந்தியன் 2' என்ற பெயரில் அப்படத்தின் 2-ம் பாகம் தயாராகியுள்ளது.
இப்படத்தில் கமலுடன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் ஜூலை மாதம் வெளியாக உள்ள நிலையில், ஏற்கனவே படத்தில் இருந்து பாரா என்ற ஒரு பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில், நேற்று 'இந்தியன் 2' படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில், கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், இயக்குனர், லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் பேசிய உலகநாயகன் கமல்ஹாசன், "இந்தியன் ஒரு பெரிய கதை, இந்தப் படத்தில் மொத்தம் மூன்று பாகங்கள். இதே மாதிரியான ஒரு படத்தை நான் சிவாஜியை வைத்து இயக்க நினைத்திருந்தேன். அவர்தான் என்னை இந்தியன் படத்தில் அப்பா - மகன் என இரு வேடத்திலும் நடிக்கச் சொன்னார். இந்த இசைவெளியீட்டிற்கு ஆன செலவு நான் நடித்த பல படங்களின் பட்ஜெட்டைக் காட்டிலும் அதிகம்.
எங்களுக்கு உறுதுணையாக இருந்த உதயநிதிக்கு மக்கள் வேறு பொறுப்பு கொடுத்திருக்கிறார்கள். அந்தப் பொறுப்பில் அவர் வெற்றி பெற வேண்டும். எங்களுக்கு அவர் உறுதுணையாக இருந்தது போல், அவரோடு நாங்களும் உறுதுணையாக நிற்க வேண்டி சூழல் வரும். மனோபாலா, விவேக் இல்லை என்பது நமக்கு தான். ஆனால், படத்தில் அவ்வாறு தெரியாது.