சென்னை:நடிகர் ஜீவா துவங்கியுள்ள புதிய நிறுவனமான 'Deaf Frogs Records' நிறுவனத்தின் துவக்க நிகழ்ச்சி நேற்று (ஜன.31) சென்னை ராயப்பேட்டை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் ஜீவா, சிவா, கார்த்தி, ஜெயம் ரவி, விஜய் ஆண்டனி, விஷ்ணு விஷால், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி மேடையில் நடிகர் ஜீவா பேசியதாவது, “புதிய திறமையானவர்களை ஊக்குவிக்கும் வகையில், இசை கலைஞர்களை தேடி வாய்ப்பு அளிக்க உள்ளோம். இசைத் துறையில் சாதிக்க நினைப்பவர்களுக்கு இந்த நிறுவனம் முக்கியமான ஒன்றாக இருக்கும். 90 கால கட்டத்தில் இசை ஆல்பம் மூலமாக அதிகளவில் நடிகர்கள், இசை கலைஞர்கள் பிரபலமாகினர். இந்த இசை நிறுவனம், புதிய கலைஞர்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சூப்பர் குட் பிலிம்ஸ் பாணியில், இந்த புதிய துவக்கத்தை எடுத்துள்ளோம். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலமாக 40 முதல் 50 இயக்குநர்கள் மற்றும் பல்வேறு கலைஞர்கள் உருவாகியுள்ளனர். நானும் அதன் மூலம் திரையுலகில் என் பயணத்தை துவங்கினேன். 21 வருடங்களுக்கு முன் ஜனவரி 31 தமிழ் சினிமாவில் அறிமுகமானேன். 20 வருடங்களில் 100 படங்கள் வரை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ளது” என்றார்.
பின்னர், நிகழ்ச்சியில் நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது, “எனது திரையுலக பயணத்தில், ஆரம்ப காலகட்டத்தில் இசையமைக்க தெரியாது, நடிக்க தெரியாது, படம் இயக்கம் தெரியாது என்று கூறினர். ஆனால், நான் ஒரு டெஃப் ஃப்ராக் போன்று காது கேட்காமல் எனது நம்பிக்கையை நோக்கி பயணித்தேன். நமக்கு நம்பிக்கை இருந்தால் எதிர்மறை விமர்சனங்களை காதில் வாங்கிக்கொள்ளாமல் டெஃப் ஃப்ராக் போன்று இருந்தால் சாதிக்கலாம்” என்றார்.
அதனைத்தொடர்ந்து, நடிகர் ஜெயம் ரவி பேசுகையில், “இன்றைக்கு சமூக வலைத் தளங்களில் இது போன்று முயற்சிகள் எடுத்து வருவது நன்றாக உள்ளது. எனக்கும், ஜீவாவுக்கும் இடையில் ரயில் மூலமாக சினேகம் ஏற்பட்டது. இந்த புதிய நிறுவனம் திறமையான இசைக்கலைஞர்களுக்கு சிறந்த வாய்ப்பு” என்று கூறினார்.