சென்னை:கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை தொடர்ந்து, முதலமைச்சர் பிரனாயி விஜயன், நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் தங்களால் இயன்ற நிதியினை 'முதலமைச்சர் நிவாரண நிதிக்கு' அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு, கர்நாடக, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் என பலரும் தங்களால் முயன்ற நிதியை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் தனுஷ், ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
அண்மையில் இவரது இயக்கத்தில் வெளியான ராயன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருவது மட்டும் அல்லாமல் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறது. அதவது படம் வெளியாகி தற்போது வரை 100க்கு கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும், தமிழகத்தில் மட்டும் 60 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிலச்சரிவு:வயநாட்டில் கடந்த மாதம் 30ஆம் தேதி பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் தரைமட்டமாயின. இந்த சம்பவத்தில் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.