சென்னை:சினிமா என்பது ஒரு மாய உலகம். யார் எப்போது சூப்பர் ஸ்டாராக உருவெடுப்பார் என்பது யாருக்கும் தெரியாத ஒன்று. யார் என்றே தெரியாத ஒருவரை நூற்றாண்டின் நடிகராக மாற்றும் சினிமா. அத்தனை திறமைகளை கொண்டிருந்தாலும் ஒரு சில படத்துடன் ஒதுக்கி வைக்கவும் இந்த சினிமா தயங்காது.
இந்த புரிதல் இல்லாமல் எத்தனையோ பேர் இந்த மாய உலகில் நுழைந்து, காணாமல் போய் உள்ளனர். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று வெறியோடு சுற்றும் ஒருவனை கடைசிவரை கண்டுகொள்ளாது. அதுவே சினிமா என்றால் என்னவென்றே தெரியாத ஒருவனை தனக்குள்ளே இழுத்து, நீச்சல் அடிக்கவைத்து கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொடுத்து இந்த சினிமா கடலில் மரியானாக மாற்றும். அப்படி மாறிய ஒருவர் தான் நடிகர் தனுஷ்.
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இயக்குநரான அவரது அப்பா கஸ்தூரி ராஜா ஒரு படத்தை இயக்குகிறார். அதில் தனது மகனை நாயகனாக நடிக்க வைக்கிறார். சினிமா பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் மீசை அரும்பாத வயதில், அண்ணன் செல்வ ராகவன் திரைக்கதை எழுதிய அடத்தில் அரிதாரம் பூசுகிறார் தனுஷ். அந்த படம் தான் 2002ம் ஆண்டு வெளிவந்த துள்ளுவதோ இளமை. தனுஷின் அப்பா தான் அந்த படத்தை இயக்கினார் என்றாலும், அண்ணன் செல்வராகவனின் டச் படம் முழுவதும் இருந்தது.
இளமை துள்ளல் நிறைந்த அந்தப் படம் வெளியாகி, அன்றைய இளசுகளை திரும்பி பார்க்க வைத்தது. தனுஷ் யார் என்றே தெரியாவிட்டாலும் அப்படத்தில் இருந்த 'ஏ' சமாச்சாரங்கள் படத்தை ஓட வைத்தது. இப்படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் கூட்டத்தில் இருந்த ஒருவர் இப்படத்தின் ஹீரோ யார்? என்று கேட்டுள்ளார். அதற்கு தனுஷ் நான் தான் என்று சொல்லியிருக்கிறார், அதை கேட்ட அந்த நபர் விழுந்து விழுந்து சிரித்தாராம்.
ஆம், அப்போது தனுஷை பார்த்த யாரும் ஹீரோ என்றே நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்கள். ஒல்லியான உடல்வாகு, நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாத நபராக அப்படத்தில் நடித்திருந்தார் தனுஷ். ஆனால் அதன்பிறகு தனது தன்னம்பிக்கை மற்றும் திறமையால் தமிழ் சினிமாவின் ஆளுமையாக உயர்ந்துள்ளார். மாஸ் படங்களிலும், கிளாஸ் படங்களிலும் இரண்டுக்கும் இடைப்பட்ட படங்களிலும் மாறி மாறி நடித்து ரசிகர்களை அசத்தும் வித்தையில் கைதேர்ந்தவரானார்.