சென்னை:நடிகர் அஜித் குமார் 'அஜித் குமார் ரேசிங்' (Ajith Kumar Racing) என்ற பெயரில் தமது தலைமையில் ஓர் அணியை உருவாக்கியுள்ளார். இந்த அணி ஜனவரி 12-ஆம் தேதி துபாயில் நடைபெற்ற '24H Dubai 2025' சர்வதேச கார் பந்தயத்தில் பங்கேற்று மூன்றாவது இடம் பிடித்து வெற்றி பெற்றது. இது அஜித் ரசிகர்களுக்கிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இந்த வெற்றியை அஜித் குமார் இந்தியக் கொடியுடன் கொண்டாடிய சம்பவம் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாது, அவரது மகன், மகள் மற்றும் மனைவி ஷாலினியுடன் அவர் இருந்த வீடியோ காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
அதனைத்தொடர்ந்து, கார் பந்தயத்தில் அஜித் குமார் அணி வெற்றிப்பெற்றதற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் கமல்ஹாசன்உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பல்வேறு பேர் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
தமிழ்நாடு அரசுக்கு நன்றி:
இந்த நிலையில், அஜித் குமார் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து நேர்காகாணல் ஒன்றிற்கு பேட்டியளித்த அஜித் குமார், "தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக, சென்னையில் முதல் முறையாக கார் பந்தயம் நடைபெற்றுள்ளது. அதுவும் அவை இரவுநேர போட்டியாக நடந்துள்ளது. இத்தகைய கார் பந்தயத்தை நடத்தி சாத்தியப்படுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி.
இது இந்தியாவின் மற்ற விளையாட்டிற்கும் ஊக்கமளிக்கும். மேலும், எனக்கு ஆதரவு அளித்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கார் பந்தயத்தில் வெற்றி பெற்று நான் மட்டும் பெருமை சேர்க்கவில்லை. நான் அதிர்ஷ்டசாலியாக எனது சிறு வயது கனவினை பின்தொடர்ந்து கார் பந்தயத்தில் வெற்றிப்பெற்றுள்ளேன்.
இதையும் படிங்க:துபாய் கார் பந்தயத்தில் மூன்றாம் இடம் பிடித்து அசத்திய அஜித்! ரசிகர்கள் பெருமிதம்
தேசிய அளவில் மட்டுமல்லாது சர்வதேச அளவில் உள்ள அனைத்து கார் பந்தய ஓட்டுநர்களுக்கும், குறிப்பாக நரேன் கார்த்திகேயன் மற்றும் கருண் சந்தோக் உள்ளிட்டோர்களுக்கு இத்தருணத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.
துபாயில் நடைபெற்ற 24H Dubai 2025 சர்வதேச கார் பந்தயத்தில் அஜித் குமார் அணிந்திருந்த உடை, தலைகவசம் மற்றும் காரில் தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முத்திரை இடம்பெற்றிருந்தது. முன்னதாக, துபாயில் நடைபெற்ற GT3 கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் பங்கேற்பதற்காக, அவர் பயிற்சி எடுக்கும் வீடியோ வெளியாகி வைரலாகியது. இதில், அவர் தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முத்திரையை பெருமையாக காட்டினார்.
இதற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறையை உலக அரங்கில் பெருமைப்படுத்தி, ஊக்குவித்துள்ளஅஜித்குமாருக்கு தமிழ்நாடு விளையாட்டுத்துறை சார்பாக நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கதாகும். மேலும், தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக, சென்னை பார்முலா 4 கார் பந்தயம் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.