சென்னை: சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம் கூட்டணியில் வெளியான மதகஜரஜா திரைப்படம் ஐந்து நாட்கள் முடிவில் 25 கோடி வசூல் செய்து, பொங்கலுக்கு வெளியான படங்களின் வரிசையில் முன்னணியில் இருக்கிறது.
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு உருவான திரைப்படம் 'மதகஜராஜா'. இப்படத்தில் விஷாலுடன் சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி, நிதின் சத்யா, சோனுசூட், முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டிபாபு என பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.
பல்வேறு பிரச்சனைகளால் கடந்த 12 ஆண்டுகளாக ரிலீஸ் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்த ‘மதகஜராஜா', தற்போது பிரச்சனைகள் எல்லாம் தீர்க்கப்பட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியானது. மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு வெளிவருவதால் ’மதகஜராஜா’ படம் குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடையே அதிகமாக இருந்தது. மேலும் 12 வருடங்கள் முன்னால் தயாரிக்கப்பட்ட திரைப்படம் என்பதால் இப்போது வெளிவரும் புதிய படங்களுடன் எப்படி போட்டியிட இருக்கிறது என சந்தேகமும் இருந்து வந்தது.
ஆனால் யாருமே எதிர்பாராத விதமாக இப்படத்துக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. மக்கள் அனைவரும் கொண்டாடத்தக்க பொழுதுபோக்கு சினிமாவாக உள்ளது என பலராலும் பாராட்டப்பட்டது. தமிழகம் முழுவதும் பல திரையரங்குகளில் பொங்கல் பண்டிகை தினங்களில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளானது. இப்படம் தான் 2025ஆம் ஆண்டு முதல் வெற்றிப் படம் என கருதப்படுகிறது.
இந்நிலையில் சாக்னில்க் (Sacnilk) இணையதளம் அறிக்கையின்படி ‘மதகஜராஜா’ திரைப்படம் ஐந்து நாட்களில் 25 கோடி வசூல் செய்துள்ளது என தெரிகிறது. 15 கோடி ட்ஜெட்டில் உருவான ‘மதகஜராஜா’ திரைப்படம், இந்திய அளவில் முதல் நாளிலும், இரண்டாவது நாளில் தலா ரூ.3 கோடி வசூலை ஈட்டியது. அதுவே, மூன்றாவது நாளில் இரு மடங்காகி ரூ.6.2 கோடி ஈட்டியது. அதைவிட கூடுதலாக நான்காம் நாளில் ரூ.6.8 கோடி வசூலை வாரிக் குவித்ததுள்ளது.
ஐந்து நாள் முடிவில் 25 கோடியை எட்டியுள்ள வசூல் நிலவரம், வார விடுமுறை முடிவில் இன்னும் அதிகரிக்கலாம் எனவும் ஞாயிற்றுக்கிழமை முடிவில் 40 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டிவிடும் வாய்ப்பிருப்பதாக திரை வர்த்தக நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது. முதல் நாளிலேயே கேம் சேஞ்சரின் தமிழ் பதிப்பு வசூலை முந்திய மதகஜராஜா தொடர்ந்து கேம் சேஞ்சரை விட அதிகமாக வசூல் செய்துள்ளது. ஜனவரி 10ஆம் தேதி வெளியான கேம் சேஞ்சர் தமிழ் பதிப்பு ஆறு நாட்கள் முடிவில் 7.17 கோடி வசூலை மட்டுமே ஈட்டியுள்ளது.
இதையும் படிங்க: சூது கவ்வும் 2 முதல் பாதாள் லோக் புது சீசன் வரை.. இந்த வார இறுதியில் ஓடிடியில் என்னென்ன பார்க்கலாம்..
மதகஜராஜாவின் இத்தகைய வசூலை திரையரங்க உரிமையாளர்களில் ரசிகர்கள் வரை இருந்து யாருமே எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் இதற்கு முன்பு மிகவும் காலதாமதாக திரையரங்குகளுக்கு வந்த ’வாலு’, ’நெஞ்சம் மறப்பதில்லை’ போன்ற தமிழ்ப்படங்கள் எதுவும் இவ்வளவு வசூல் செய்ததில்லை.
’மதகஜராஜா’ வெற்றிக்கு காரணம், நகைச்சுவை நடிகராக இருந்த சந்தானத்தின் கவுண்டர் நகைச்சுவைதான் என ரசிகர்களிடையே கூறப்படுகிறது. மறைந்த நடிகர்களான மனோபாலா, மணிவண்ணன் ஆகியோரின் நகைச்சுவையும் படத்திற்கு பலமாக உள்ளதாக கூறப்படுகிறது.