மங்களூரு: கர்நாடகாவில் நேற்றைய தினம் பிதர் மாவட்டத்தில் எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்ப வந்தபோது இரு மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி சுமார் 93 லட்சம் ரூபாய் இருந்த பெட்டியை திருடி சென்றனர். இதில் ஒரு காவலாளி துப்பாக்கி குண்டுக்கு பலியானார். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தின் பரபரப்பு ஓயாத நிலையில், இன்று மங்களூருவில் உள்ள ஒரு வங்கியில் முகமூடி கொள்ளையர்கள் புகுந்து ரூ.12 கோடி அளவில் கொள்ளை அடித்து சென்றிருப்பது அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மங்களூருவில் உள்ள கூட்டுறவு வங்கியில் இன்று காலை 11.30 மணி அளவில் ஒரு கும்பல் முகமூடி அணிந்து, கைத்துப்பாக்கிகள், மற்றும் கத்திகளுடன் நுழைந்துள்ளது. அப்போது வங்கியில் 5 ஊழியர்கள் இருந்துள்ளனர். தொடர்நது அந்த கும்பல் ஆயுதங்களை காட்டி மிரட்டி 12.30 மணி வரை பணம், நகைகளை கொள்ளையடுத்துவிட்டு காரில் ஏறி தப்பியுள்ளது.
இதுகுறித்து மங்களூரு நகர காவல் ஆணையர் அனுபம் அகர்வால் கூறுகையில், '' கொள்ளையர்கள் இந்தியில் பேசியுள்ளார்கள். வங்கியில் இருந்த தங்க ஆபரணங்கள் மற்றும் மதிப்புமிக்க பொருட்கள் அடங்கிய அலமாரியை திறந்து கொள்ளையடித்து சென்றுள்ளனர். நகை, ரொக்கம் என கொள்ளைபோன பொருட்களின் மதிப்பு 10 முதல் 12 கோடி வரை இருக்கும் என வங்கியில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் கருப்பு நிற ஃபியட் காரில் தப்பியுள்ளனர்.
குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன. தடயங்கள் மற்றும் சிசிடிவி அடிப்படையில் கொள்ளையர்களை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன" என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: ஏடிஎம்மில் நிரப்ப இருந்த ரூ.93 லட்சம்... துப்பாக்கிச் சூடு நடத்தி பட்டப்பகலில் கொள்ளை...!
இந்தி, கன்னடம் பேசிய கொள்ளையர்கள்:
தொடர்ந்து பேசிய காவல் ஆணையர், கொள்ளை நடந்தபோது வங்கி ஊழியர்களின் அலறல் சத்தம் கேட்டு, கீழே இருந்த மாணவர்கள், முதல் தளத்தில் உள்ள வங்கியை நோக்கி வந்துள்ளனர். அப்போது, மாணவர்களை திரும்பி செல்லுமாறு கொள்ளையர்கள் மிரட்டியுள்ளனர். அப்போது அவர்கள் கன்னடத்தில் தான் பேசியுள்ளனர். ஆனால், வாங்கி வங்கி ஊழியர்களிடம் இந்தியில் பேசியுள்ளனர்.
மேலும், சம்பவத்தின்போது வங்கியின் சிசிடிவிவை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த டெக்னீஷியன் ஒருவரின் விரலில் இருந்த மோதிரத்தையும் மிரட்டி வாங்கிவிட்டு கொள்ளையடித்த தங்கம் மற்றும் பணத்தை துப்பாக்கிப் பையில் வைத்துக்கொண்டு கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர்'' என தெரிவித்தார்.
முதல்வர் உத்தரவு
மேலும், வங்கி கொள்ளை தொடர்பாக, கர்நாடக முதல்வர் சித்தராமையா மங்களூருவில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி, குற்றவாளிகளை விரைவாக கண்டுபிடிக்க உத்தரவிட்டுள்ளார். அந்த ஆலோசனையின் போது, '' இந்த துணிச்சலான சம்பவம் எப்படி நடந்தது? கொள்ளையர்கள் எப்படி எளிதாக தப்பினார்? எத்தனை சுங்கச்சாவடிகளை அவர்கள் கடந்திருப்பார்கள்? நீங்கள் ஏன் சுங்கச்சாவடிகளை எச்சரிக்கையாக வைக்கவில்லை என அதிகாரிகளை கடிந்துகொண்டதாக கூறப்படுகிறது.
சபாநாயகர் வருகை:
கொள்ளை சம்பவம் நடக்கும்போது முதல்வரின் நிகழ்ச்சியில் இருந்த கர்நாடக சட்டசபை சபாநாயகர் யு.டி. காதர், நிகழ்ச்சியை பாதியில் விட்டுவிட்டு, வங்கியை பார்வையிட்டு, ஊழியர்களிடம் நடந்தவற்றை கேட்டறிந்தார். மேலும், கொள்ளையர்களை உடனடியாக கைது செய்யுமாறு காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மோப்ப நாய் பிரிவினர், கைரேகை நிபுணர்கள் மற்றும் மங்களூரு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.