சென்னை: மிக நீண்ட வருடங்கள் கழித்து வெளியான 'மதகஜராஜா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம் கூட்டணியில் வெளியான மதகஜரஜா திரைப்படம் ஐந்து நாட்கள் முடிவில் 25 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு உருவான திரைப்படம் 'மதகஜராஜா'. இப்படத்தில் விஷாலுடன் சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி, நிதின் சத்யா, சோனுசூட், முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டிபாபு என பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.
பல்வேறு பிரச்னைகளால் பல ஆண்டுகளாக ரிலீஸ் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்த 'மதகஜராஜா', ஜனவரி 12ஆம் தேதி வெளியானது. 12 வருடங்கள் முன்னால் தயாரிக்கப்பட்ட திரைப்படம் என்பதால் இப்போது வெளிவரும் புதிய படங்களுடன் எப்படி போட்டியிட இருக்கிறது என சந்தேகமும் இருந்து வந்தது.
ஆனால் யாருமே எதிர்பாராத விதமாக இப்படத்துக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. மக்கள் அனைவரும் கொண்டாடத்தக்க பொழுதுபோக்கு சினிமாவாக உள்ளது என பலராலும் பாராட்டப்பட்டது. தமிழகம் முழுவதும் பல திரையரங்குகளில் பொங்கல் பண்டிகை தினங்களில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளானது. இப்படம் தான் 2025ஆம் ஆண்டு முதல் வெற்றிப் படம் என கருதப்படுகிறது.
இந்த வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழாவை படக்குழுவினர் சென்னையில் ஒருங்கிணைத்தனர். அதில் சுந்தர் சி, அஞ்சலி, விஜய் ஆண்டனி, விஷால் என படக்குழுவினர் அனைவரும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினர். மேடையில் பேசிய விஷால், "மதகஜராஜா படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது. எல்லோருக்கும் பிரச்னை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அந்தப் பிரச்னையை எல்லாம் மறக்கும்படியான ஒரு படமாக அமைந்திருக்கிறது மதகஜராஜா.
பன்னிரெண்டு வருடங்களாக மனதில் மட்டுமே இருந்து வந்த மதகஜராஜா இப்போது வெளி வந்துவிட்டது. கடவுளதான் இந்த விடுமுறை நாட்களைப் பார்த்து படத்தை வெளியிட வைத்திருக்கிறார். மதகஜராஜா புரமோஷன் நடந்த தினம் எனக்கு காய்ச்சல் அடித்தது. தீவிரமான காய்ச்சல் மருத்துவர்கள் என்னை நிகழ்வுக்கு போக வேண்டாம் என அறிவுறுத்தினார்கள். ஆனால் 12 வருடங்கள் கழித்து மதகஜராஜா ரிலீஸாகிறது.
இதையும் படிங்க: அஜித்துடன் இருமுறையும் மோதுவாரா இயக்குநர் தனுஷ்..? முன்பே வரும் தனுஷின் படம்
இந்தப் படத்துக்காக நானும், சுந்தர்.சி-ம் ஏங்கியிருக்கிறோம். நானும் அவரும் அடிக்கடி இந்த படத்தை பற்றி பேசியுள்ளோம். அதனால் தான் அன்று காய்ச்சலோடு புரோமோஷனுக்கு வந்தேன். ஆனால் காய்ச்சலால் அன்று உடல்நிலை அப்படி இருந்தது. எனது உடல்நிலைக்கு ஒன்றுமே இல்லை. மற்றபடி எனக்கு நரம்பு தளர்ச்சி, நான் போதைக்கு அடிமையாகிவிட்டேன் என்று எழுதுவதெல்லாம் சிலரின் கற்பனை.
அந்த கற்பனையை இயக்குநர்களுக்கு கொடுத்து விடுங்கள்; இல்லையென்றால் உங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்ளுங்கள். சினிமா பிரபலங்கள் குறித்து ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் அவர்களிடமே கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் எனக்கு எப்போதும் அழைத்து பேசலாம். அதை விடுத்து இப்படியெல்லாம் எழுதாதீர்கள்.
எனது கைகள் நடுங்கிய வீடியோ பயங்கரமாக ட்ரெண்டாகிவிட்டது. அதனையடுத்து பலரும் எனக்கு ஃபோன் செய்தார்கள். அப்போதுதான் என் மீது எத்தனை பேர் அக்கறையாக இருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டேன். அதற்கு நன்றி," என்றார்.