சென்னை: நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் உயர்கல்வியில் விளிம்பு நிலை மக்களின் நிலை பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், மேற்குவங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹுவா மொய்த்ரா, டெரிக் ஓ பிரைன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
அதில் பேசிய திருமாவளவன், “விளிம்பு நிலை சமூகம் அனைத்து இடங்களிலும் புறக்கணிக்கப்படுகிறது. மத்திய அரசு அனைவருக்குமான கல்வி கொள்கையை வரையறுக்க வேண்டியது தவிர்க்க முடியாத ஜனநாயக கடமையாக மாறி உள்ளது. நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே புகழ் பெற்று விளங்கியது நாளந்தா பல்கலைகழகம்.
அனைவருக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும், அனைவரும் சமமாக உயர்த்தப்பட வேண்டும் என்கிற எண்ணம் புத்த மதத்தில் இருந்தது. இந்தியாவில் இரண்டு கோட்பாடுகள் உள்ளன. ஒன்று அனைவரையும் ஒருங்கிணைத்து அரவணைத்து செல்லும் கோட்பாடு, மற்றொன்று குறிப்பிட்ட சிலருக்கு வாய்ப்பு வழங்கப்படுவதால் பெரும்பான்மையானவர்களுக்கு கல்வி மறுக்கப்படுகிறது.
ஒவ்வொரு மனிதனுக்கும் கல்வி அடிப்படை உரிமை என்பதை உணர்த்தியவர்கள் ஆங்கிலேயர்கள் தான். நம்மை ஆண்டார்கள் அடிமைபடுத்தினார்கள் என்கிற விமர்சனம் இருந்தாலும் கூட கல்வி, மருத்துவத்தை பாகுபாடு இன்றி அனைவருக்கும் கிடைக்கும்படி ஆங்கிலேயர்கள் பார்த்தார்கள். புதிய கல்வி கொள்கை கல்வியின் தரத்தை உயர்த்த அல்ல, விளிம்பு நிலை மக்கள் கல்வி கற்கும் எண்ணிக்கையை குறைப்பதற்கான முயற்சி. பள்ளிக் கல்வியில் ஒருவரை நிறுத்தி விட்டால் உயர்நிலை கல்விக்கு வர முடியாது, அப்படி வர முடியவில்லை என்றால் அவர்கள் முடிவுவெடுக்கும் இடத்திற்கு வர முடியாது என்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள சூழ்ச்சி தான் இது.
உயர்கல்வி என்பது தான் உண்மையில் கல்வி, பள்ளி கல்வி ஒரு அடிப்படை கல்வி. அது மட்டுமே கல்வி அல்ல, அதை வைத்து முடிவெடுக்கும் திறனை வளர்த்துக் கொள்ள முடியாது. பிரதமராக இருக்கும் வாய்ப்பு மக்கள் கொடுத்தாலும், தேவையான சட்டத்தை அவரால் வரையறுக்க முடியாது. அதற்கான தகுதியை கல்வி தான் தரும். தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் எல்லாம் தரம் உயர வேண்டுமானால் அவர்களுக்கு உயர்கல்வி தேவை.
யாரும் தாங்கள் விரும்பும் மொழியை படிக்கலாம், அதை யாரும் தடுக்க முடியாது. ஹிந்தியை படிக்க விரும்பும் மக்கள் ஹிந்தியை படிக்கலாம். ஒரு அரசு கல்வி பாடங்களில் ஒற்றை மொழியை திணிக்க முயற்சிப்பது தான் நாம் எதிர்க்கிறோம். கல்விக் கொள்கையை வகுக்கும் போது அதனை அனைவருக்குமானதாக கட்டமைக்க வேண்டும். விளிம்புநிலைச் சமூகம், Empower ஆக வேண்டுமானால், வலிமை பெற வேண்டுமானால் உயர்கல்வி அவசியம்.
விளிம்புநிலைச் சமூகத்தின் கல்வியின் எதிர்கால நிலை கேள்விக்குறியாக உள்ளது. ஒரு தேசத்தின் பயிற்று மொழியாக, ஒரே மொழியை திணிக்கக் கூடாது. ஒரே தேசம், ஒரே மொழி என்கிற திணிப்பை தான் எதிர்க்கிறோம். எந்த மொழியையும் எதிர்க்க வேண்டாம். எந்த மொழியையும் நான் பழிக்கவில்லை. ஒரே மொழி, ஒரே தேசம் என்பதை நாம் எதிர்க்கிறோம். ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை கட்டணம் இல்லை என்று அறிவிக்கும் அரசு தான் மக்களை உயர்த்தும், மேம்படுத்தும் அரசாக இருக்க முடியும்.
கல்வி கட்டணம் இல்லாமல் வந்தால் அந்த நாடு உலக அளவில் மிக உயர்ந்த தேசமாக இருக்கும். இந்த சதித்திட்டங்களை முறியடிக்கும் முயற்சியில் மாணவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு நிதி விடுவிக்கப்படாமல் இருப்பது அந்த கல்வி நிறுவனங்களில் மட்டுமல்ல தமிழ்நாட்டில் பல கல்வி நிறுவனங்களில் நிதி பற்றாக்குறை பிரச்சனை உள்ளது. சிறுபான்மை சமூக பிரிவினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் அரசு நிதி சிக்கல்கள் இருப்பது உண்மை. பல பல்கலைக்கழகங்களில் நிதி இல்லை என்கிற புலம்பலை என்னிடம் தெரிவித்துள்ளார்கள்.
விளிம்பு நிலை சமூகங்கள் உயர்கல்வி பெற வேண்டும் என்கிற நிலைப்பாடு எட்டாக்கனியாகவே உள்ளது. விளிம்புநிலைச் சமூகத்தின் கல்வியின் எதிர்கால நிலை கேள்விக்குறியாக உள்ளது. ஒரு தேசத்தின் பயிற்று மொழியாக, ஒரே மொழியை திணிக்க கூடாது. ஒரே தேசம், ஒரே மொழி என்கிற திணிப்பைதான் எதிர்க்கிறோம். எந்த மொழியையும் எதிர்க்க வேண்டாம் எனத் தெரிவித்தார்.
2020ஆம் ஆண்டில் 28.5% மாணவர்கள் உயர்கல்வியை அடைந்திருந்தனர். 2035க்குள் 50 சதவீதம் மாணவர்கள் உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற இலக்கை மத்திய அரசு வைத்திருக்கிறது. தற்போது 31 முதல் 32 சதவிதம் மட்டுமே மாணவர்கள் உயர்கல்வியை பயின்று வருகின்றனர். சீனாவுடன் ஒப்பிடாக எடுத்தோமானால் சீனாவில் பத்தில் 7 பேர் உயர்கல்வி படிக்கின்றனர். ஆனால் இந்தியாவில் தற்போது மேல்நிலை வகுப்பு முடித்த மாணவர்களில் பத்தில் மூன்று பேர் மட்டுமே உயர்கல்விக்கு செல்கின்றனர்.
கல்வி கற்பிப்பதில் இந்தியா உலகின் மிகப்பெரிய மூன்றாவது நாடாக இருக்கிறது. அவற்றை நாம் எப்படி கணக்கீடு செய்கிறோம் என்றால் எவ்வளவு மாணவர்கள் படிக்கின்றனர், அவர்களுக்கு எவ்வளவு பல்கலைக்கழகங்கள் இருக்கிறது என்பதை பொறுத்து இந்த கணக்கீடு எடுக்கப்படுகிறது. இந்தியாவில் 50,000 வரை கல்லூரிகள் இருக்கிறது, ஆனால் நம்முடைய மக்கள்தொகையை எடுத்துக் கொண்டால் அது போதுமானதாக இல்லை.
அமெரிக்காவில் 4000 பல்கலைக்கழகங்களும், சீனாவில் 2800 பல்கலைக்கழக்கங்களும் உள்ளன. ஆனால் அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் 1200 பல்கலைக்கழகங்கள் மட்டுமே உள்ளன. பல்கலைக்கழகங்களை கணக்கிட்டால் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. ஆனால் நம்முடைய மக்கள்தொகையை கணக்கிட்டு பார்க்கும் போது, அது போலும் போதுமானதாக இல்லை. கல்வியில் நாம் இன்னும் அதிகம் முன்னோக்கி செல்ல வேண்டிய சூழல் உள்ளது என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், ”எந்த மொழியை யார் வேண்டுமானாலும் கற்கலாம். எந்த மொழியிலும் திறமைகளை கற்றுக் கொள்ளலாம் அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. இந்தி பிரசார சபா, தனியார் சி.பி.எஸ்.இ பள்ளிகளில், கேந்திர வித்யாலயா உள்ளிட்டவற்றில் தமிழ்நாட்டில் இந்தி கற்றுக் கொடுக்கப்பட்டு வருவதை யாரும் பெரியளவில் எதிர்க்கவில்லை.
ஒரே தேசம், ஒரே மொழி என்கிற நிலைப்பாட்டை எடுத்து ஒரு மொழியை அரசு திணிக்கப் பார்க்கிறது. பல மொழிகள் பேசக்கூடிய தேசிய இனங்கள் உள்ளன. பல தசாப்தங்களுக்குப் பின்னர் இந்தியாவில் ஒரே மொழியாக இந்தியை பேச வைக்க வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் நோக்கம். இந்தியை ஒற்றை மொழியாக்க வேண்டும் என்பதை மத்திய அரசின் நிலைபாடு. ஒரே தேசம், ஒரே கலாச்சாரம் என்பது போல ஒரே தேசம் ஒரே மொழி என்பதும் அவர்களின் நிலைபாடு. இந்த திணிப்பைதான் எதிர்க்கிறோம்.
தமிழ் பிராந்திய மொழி எனக் கூறப்படுகிறது. அப்போது இந்தி பிராந்திய மொழியில்லையா? இந்தியும் பிராந்திய மொழி தான். தேசிய மொழியாக 20க்கும் மேற்பட்டவை இருக்கும் போது இந்தியையும், சமஸ்கிருதத்தையும் அதிகளவிம் நிதி ஒதுக்கி கொள்கை கோட்பாடா முன்னிறுத்தப்படுகிறது. தனியார் பள்ளியில் இந்தி கற்றுக் கொடுக்கப்படுவது வேறு, அரசே கொள்கையாக இந்தியை திணிப்பது வேறு அத்தகைய கொள்கைத் திணிப்பைத் தான் எதிர்க்கிறோம்.
இந்தி பயில விரும்பும் அரசுப் பள்ளி மாணவர்கள் தனியார் பயிற்சி சென்று படிக்கிறார்கள். இந்தியை கட்டாயம் படிக்க வேண்டிய அவசியமில்லை. இந்தியை ஏன் கட்டாயம் படிக்க வேண்டும்? இந்தியை படிப்பதால் என்ன பயன்? இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் தமிழ்நாட்டில் கூலிவேலை செய்கிறார்கள். இந்தியை தாய்மொழியாக கொண்டவர்களுக்கே இங்கு வேலை இல்லை. அரசுப் பள்ளிகளில் மூன்றாவதாக இந்தியை படிக்க யாரும் விரும்பவில்லை.
இதையும் படிங்க: "புதிய கல்விக் கொள்கையை அரசியலாக்க வேண்டாம்..." முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம்!
நான் சி.பி.எஸ்.இ பள்ளி எதுவும் நடத்தவில்லை. எனது இடத்தில் ஒருவர் நடத்த உள்ளார். அதற்கான பெயர் மட்டும்தான் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. எனது இடத்தில் நடத்தப்படுவதால் எனது பெயரை பயன்படுத்தி உள்ளனர். அண்ணாமலை பரபரப்புக்காகவும், ஊடக கவன ஈர்ப்புக்காகவும் தினமும் பேசி வருகிறார்.
நாகரீக அணுகுமுறையுடன் அண்ணாமலை பேசுவதில்லை. யாரையும் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்கிற வகையில் பேசுகிறார். எனக்கு இரட்டைவேடம் போட வேண்டிய தேவை இல்லை. தமிழ்நாட்டுக்கு சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தில் வரவேண்டிய நிதி வரவில்லை என்பது குறித்தெல்லாம் அண்ணாமலைக்கு கவலையில்லை" என கூறியுள்ளார்.