சென்னை:துபாயில் நடைபெற்ற 24H Dubai 2025 சர்வதேச கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் தலைமையிலான அணி மூன்றாவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழும் அஜித் குமார், கைத்தேர்ந்த கார் பந்தய வீரராகவும் திகழ்ந்து வருகிறார். அத்துடன் அஜித்குமார் ரேசிங் என்ற பெயரில் தமது தலைமையில் ஓர் அணியையும் அவர் உருவாக்கியுள்ளார்.
இந்த அணி, துபாயில் தற்போது நடைபெற்றுவரும் 24H Dubai 2025 கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ளது மட்டுமின்றி, வெற்றிவாகையும் சூடியுள்ளது. அஜித் தலைமையிலான அணி, இந்தப் பந்தயத்தில் மூன்றாவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
இதுகுறித்து, அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், 'துபாயில் நடைபெற்றுவரும் கார் பந்தயத்தில் 991 பிரிவு மற்றும் ஜி14 பிரிவில் மூன்றாம் இடத்தை பிடித்து அஜித் அசத்தியுள்ளார். பயிற்சியின்போது பிரேக் பிடிக்காததால் அவரது கார் விபத்தில் சிக்கியது. இவ்விபத்து நிகழ்ந்து சில நாட்களிலேயே இப்படியொரு வெற்றியை அஜித் குவித்துள்ளார்.' என்று சுரேஷ் சந்திரா பெருமித்துடன் தெரிவித்துள்ளார்.
மகன் வாங்கிய வெற்றிக் கோப்பை:இப்போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த வீரர்களுடன் இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி அஜித் நிற்க, அவருடன் நிற்கும் அஜித்தின் மகன், வெற்றி கோப்பையை கையில் ஏந்தும் வீடியோ, தற்போது வைரலாகி வருகிறது. அத்துடன் தேசியக் கொடியை அசைத்தப்படி, ரசிகர்களுக்கு மத்தியில் அஜித் மைதானத்தை வலம்வரும் வீடியோவை கண்டு அவரது ரசிகர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நடிகர் மாதவன் வாழ்த்து:துபாய் கார் ரேசில் வெற்றிவாகை சூடியுள்ள அஜித் குமாருக்கு, நடிகர் மாதவன் நேரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ஜெர்சியுடன் தேசியக்கொடியை உணர்ச்சி பொங்க கையில் பிடித்தபடி உள்ள அஜித்தை. நடிகர் மாதவன் பெருமிதத்துடன் கட்டியணைத்து வாழ்த்துத் தெரிவிக்கும் வீடியோவும் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.