சென்னை: திருப்பதி லட்டு விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய கார்த்தி
திருப்பதி கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. பிறகு திருப்பதி லட்டு ஆய்வு செய்யப்பட்டதில் அதில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்டதாக உறுதி செய்யப்பட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், நடிகர் கார்த்தி ’மெய்யழகன்’ திரைப்பட ப்ரமோஷனில் ஹைதராபாதில் பேசினார்.
அப்போது பெண் தொகுப்பாளர் லட்டு பற்றி கேட்ட போது கார்த்தி, லட்டு சென்சிடிவான விஷயம் எனவும், அதுகுறித்து பேச விரும்பவில்லை எனவும் கூறி சிரித்தார். கார்த்தி இவ்வாறு கூறியதற்கு நடிகரும், ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் எதிர்ப்பு தெரிவித்தார். லட்டு விஷயத்தை சினிமா நடிகர்கள் காமெடியாக நினைக்கக் கூடாது. சனாதன தர்மம் என்று வரும் போது ஒன்றுக்கு 100 முறை யோசித்து பேச வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து நடிகர் கார்த்தி தனது சமூக வலைதள பக்கம் மூலம் மன்னிப்பு கோரினார். தவறான புரிதலுக்காக நான் மன்னிப்பு கோருகிறேன் எனவும், வெங்கடேஸ்வரா பக்தனாக நம் மரபுகளை மதிப்பேன் எனவும் கூறி இருந்தார். இந்த விவகாரம் தென்னிந்திய சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நயன்தாரா VS தனுஷ்
நடிகை நயன்தாராவின் வாழ்க்கை வரலாறு குறித்த ஆவணப்படம் அவரது பிறந்தநாளுக்கு வெளியானது. நயன்தாரா ஆவணப்படத்தின் டிரெய்லரில் ’நானும் ரௌடி தான்’ படத்தின் முன்று விநாடி காட்சிகள் பயன்படுத்தப்பட்டதாக தயாரிப்பாளர் தனுஷ் 10 கோடி இழப்பீடு கேட்டு நயன்தாராவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனைத்தொடர்ந்து நயன்தாரா தனுஷிற்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த அறிக்கையில், உங்களது தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கைகளால் நானும், எனது கணவரும் மட்டுமன்றி, ஆவணப்பட பணிகளில் அர்ப்பணிப்போடு பங்காற்றிய ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்டதாகவும், இந்த செயல், ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
மேடைகளில் உங்கள் அப்பாவி ரசிகர்கள் முன் பேசுவைதப் போல், ஒரு சதவீதம் கூட உங்களால் நடந்துகொள்ள முடியாது என மூன்று பக்கத்திற்கு தனுஷை விளாசியிருந்தார். இந்த விவகாரத்தில் பல நடிகைகள் நயன்தாராவிற்கு ஆதரவு அளித்தனர். இந்த காப்புரிமை விவகாரம் தொடர்பான வழக்கு தற்போது உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
’கங்குவா’ திரைப்பட விமர்சனம்
ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், நட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் வெளியான திரைப்படம் 'கங்குவா'. இப்படத்தின் டீசர் வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக இருந்து வந்தது. சிவா இயக்கும் பீரியட் படத்தில் சூர்யா என்பதால் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. மேலும் பான் இந்தியா அளவில் கங்குவா வெளியிடப்பட்டதால் படக்குழு இந்தியா முழுவதும் பம்பரம் போல சுழன்று புரமோஷன் செய்தனர்.
ஆனால் அதுவே படத்திற்கு பாதகமாக மாறியது. அதாவது ஞானவேல் ராஜா மற்றும் சூர்யா ஆகியோர் கங்குவா 2000 கோடி வசூல் செய்யும், வாயை பிளந்து பார்ப்பார்கள் என பில்டப் கொடுத்த அளவிற்கு இல்லை என ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். படம் பார்த்தவர்கள் இயக்குநர் சிவாவை அடிக்க வேண்டும் என்கிற அளவுக்கு கோபமடைந்தனர்.
கங்குவா விமர்சனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மற்றொரு புறம் ஜோதிகா உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலர் கங்குவா படத்திற்கு ஆதரவாக பதிவிட்டனர். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்து தயாரிப்பாளர்கள் சங்கம் படம் வெளியாகி 3 நாட்களுக்கு விமர்சனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். கங்குவா விமர்சன சர்ச்சை தற்போது வரை கோலிவுட்டில் பேசு பொருளாக இருந்து வருகிறது.
இளையராஜா காப்புரிமை பிரச்சனை
இளையராஜா திரைத்துறை கலைஞர்கள் பலர் மீது காப்புரிமை வழக்கு பதிவு செய்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு அவரது நெருங்கிய நண்பரான மறைந்த பாடகர் எஸ்பிபி மீது காப்புரிமை வழக்கு தொடர்ந்தார். 1000 படங்களுக்கு மேல் இசையமைத்த இளையராஜா தனது சமகால பாடகர் எஸ்பிபியிடம் காப்புரிமை கேட்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: 2024இல் இளைஞர்களை வைப் செய்ய வைத்த சிறந்த ஆல்பம் பாடல்கள்! - BEST ALBUMS 2024
இதனைத்தொடர்ந்து இந்த வருடம் அனிருத் இசையமைப்பில் ரஜினிகாந்த் நடித்து வரும் ’கூலி’ படத்தின் ப்ரோமோ வெளியானது. இந்த ப்ரோமோவில் ’coolie disco’ என்ற பாடல் இடம்பெற்றது. இந்த பாடல் இளையராஜா இசையமைத்த ‘வா வா பக்கம் வா’ பாடலை போல் உள்ளதாக கூலி படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பி சலசலப்பை ஏற்படுத்தினார். அதேபோல் இந்த வருடம் மாபெரும் வெற்றி பெற்ற மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் குணா பட பாடல் பயன்படுத்தப்பட்டது. இதற்கும் இளையராஜா படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.