தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

தீபாவளி 2024 படங்கள்.. நீங்கள் பார்க்க விரும்பும் படம் என்ன? - DIWALI RELEASE MOVIES

சிவகார்த்திகேயனின் 'அமரன்', ஜெயம் ரவியின் 'பிரதர்', துல்கர் சல்மானின் 'லக்கி பாஸ்கர்', கவினின் 'பிளடி பெக்கர்' ஆகிய நான்கு முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் நாளை திரைக்கு வருகிறது.

தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்கள்
தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்கள் (Credits - ETV Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 30, 2024, 3:38 PM IST

சென்னை:பண்டிகை நாட்களில் வெளியாகும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்புகள் உண்டு. அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு சினிமாவில் நான்கு முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வருகிறது.

அமரன்:ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி அமரன் திரைப்படம் உருவாகியுள்ளது. ரங்கூன் திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்க, வழக்கமான தனது உடல் மொழியை மாற்றி ராணுவ வீரராகவே பல்வேறு கட்ட பயிற்சிகளை எடுத்து முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

முதல்முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி இதில் நடித்துள்ளார். இதற்கு ஜிவி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உலகம் முழுவதும் நாளை திரைக்கு வர உள்ளது. ஏற்கனவே இப்படத்தில் டீசர், ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

இதற்கு முன்பு வெளியான படங்களை விட, அமரன் படத்திற்கு அதிக அளவிலான தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 800க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் அமரன் திரைப்படம் வெளியாக உள்ளது.

பிரதர்:சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமான எம்.ராஜேஷ் இயக்கத்தில், ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிரதர் (Brother). அக்கா, தம்பி இடையிலான குடும்பப் பின்னணியைக் கொண்டு உருவாகியுள்ள இப்படமும் நாளை திரைக்கு வர உள்ளது.

இதற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். அக்கா கதாபாத்திரத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பூமிகா தமிழில் நடித்துள்ளார். எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சந்தோஷ் சுப்பிரமணியம் ஆகிய படங்களைத் தொடர்ந்து, குடும்பப் பின்னணியில் ஜெயம் ரவி நடித்துள்ள 'பிரதர்' திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் எழுந்துள்ளது.

இதையும் படிங்க:நவம்பர் 1 முதல் புதிய படப்பிடிப்புகள் நடக்காது; தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு!

பிளடி பெக்கர்:இயக்குநர் நெல்சன் திலீப் குமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில், கவின் நடித்துள்ள பிளடி பெக்கர் நாளை திரைக்கு வர உள்ளது. இதன் மூலம் பிரபல இயக்குநர் நெல்சன் திலீப் குமார் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.

இப்படத்திற்கு டாடா படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் பெற்ற ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். ஒரு பிச்சைக்காரனின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு டார்க் காமெடி ஜானரில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

லக்கி பாஸ்கர்:வெங்கி அட்டூரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி, ராம்கி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லக்கி பாஸ்கர்'. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகியுள்ள லக்கி பாஸ்கர் திரைப்படமும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை திரைக்கு வர உள்ளது.

அமரன் படத்தை தொடர்ந்து, லக்கி பாஸ்கர் படத்திற்கும் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இரண்டு முறை ஏற்கனவே ரிலீஸ் தேதி மாற்றி அறிவித்த நிலையில், இறுதியாக தீபாவளி பண்டிகைக்கு படம் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தமாக நாளை 4 படங்கள் திரைக்கு வரவுள்ளது. இதில் தீபாவளி ரேசில் எந்த படம் வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

ABOUT THE AUTHOR

...view details