டெல்லி: மக்களின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்யும் இடத்தில் இருந்த மளிகைக் கடைகளின் தேவை தற்காலச் சூழலில் குறைந்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணமாக மின்னணு வர்த்தக நிறுவனங்கள் எனப்படும் ஆன்லைன் ஷாப்பிங் அல்லது ஆன்லைன் இ-காமர்ஸ் நிறுவனங்கள் இருந்து வருகிறது.
இந்த சூழலில், நாடாளுமன்றத்தில் நுகர்வோர் நல அமைச்சகத்திடம் மின்னணு வர்த்தக நிறுவனங்கள் மீது எத்தனை புகார்கள் வந்துள்ளன, அவற்றின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி (எண் 3815/18.12.2024) எழுப்பி இருந்தார்.
அதற்கு பதில் அளித்துள்ள நுகர்வோர் நலன் இணை அமைச்சர் பி.எல்.வர்மா, 2021 - 2024 நிதியாண்டுகளில் மின்னணு வர்த்தக நிறுவனங்கள் மீது 12 லட்சத்து 92 ஆயிரத்து 728 (12,92,728) புகார்கள் வந்துள்ளன என்று பதில் அளித்துள்ளார். இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
இந்த நான்கு ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டும் புகார்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே வந்துள்ளதே தவிர குறைந்தபாடில்லை. 2020 -21 இல் 2,05,000 புகார்கள் எனில் 2023 - 24 இல் 4,45,000 என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது. ஃபிளிப்கார்ட் நிறுவனத்திற்கு எதிரான புகார்கள் மட்டும் நான்கு ஆண்டுகளில் நாலு லட்சத்திற்கு மேல் (4,34,000) ஆகும். அமேசான் நிறுவனத்திற்கு எதிராக 4 ஆண்டுகளில் ஒன்றரை லட்சத்திற்கும் (1,55,000) அதிகமாகப் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நுகர்வோர் நலன் பாதுகாப்பதற்கு இந்த புகார்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற கேள்விக்கு நேரடியான எந்த பதிலும் தரவில்லை என சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "சட்டம் என்ன சொல்கிறது, எப்படி புகார்களை பதிவு செய்கிறோம் என்று மட்டும் அமைச்சர்கள் விளக்கம் கூறியுள்ளார். நீண்ட விளக்கத்தில் நுகர்வோர்களை தவிக்க விடும் மின்னணு வர்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட விவரங்கள் ஏதுமில்லை. இப்படி நிலைமை இருந்தால் ஆண்டுக்காண்டு புகார்கள் அதிகரிக்கத்தானே செய்யும்!," என்று கூறியிருக்கிறார்.