மஹபூபாபாத்: தெலங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும், குறிப்பாக ஆந்திராவின் விஜயவாடா வெள்ளநீரினால் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இதனையடுத்து, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேநேரம், இதனால் ரயில் போக்குவரத்தும் சிரமத்தைச் சந்தித்துள்ளது. குறிப்பாக, தெற்கு மத்திய ரயில்வேயின் விஜயவாடா மண்டலத்தில் 140 ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல், 97க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன.
மேலும், இதுவரை 10.56 லட்சம் கன அடி வெள்ள நீர் விஜயவாடாவில் பிரகாசம் தடுப்பணையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், வெள்ளத்தில் சிக்கி இதுவரை 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஆந்திர - தெலங்கானா மாநில அரசுகள் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தெலங்கானா மாநிலத்தின் கம்மம் மாவட்டத்தில் உள்ள சிஙரேனி மண்டல் பகுதிக்கு உட்பட்ட கரேபள்ளி கங்காராம் பகுதியைச் சேர்ந்தவ்ர் அஷ்வினி. 25 வயதான இவர், டெல்லியில் உள்ள விதை ஆராய்ச்சி நிறுவனத்தில் இளம் விஞ்ஞானியாக பணியாற்றி வந்தார்.
இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனையடுத்து, கனமழை பெய்து கொண்டிருந்த நேரத்தில், தனது தந்தை மோதிலால் உடன் டெல்லி செல்வதற்காக காரில் ஹைதராபாத் விமான நிலையம் சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில், இவர்களது கார் மஹபூபாபாத் மாவட்டத்தின் அகேரு ஸ்ட்ரீம் அருகே வந்த போது வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு, இருவரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவரும், முன்னாள் அமைச்சரும், சிரிசில்லா தொகுதி எம்எல்ஏவுமான கே.டி.ராமா ராவ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் வேளாண் விஞ்ஞானி டாக்டர் அஷ்வினி உயிரிழந்த செய்தி துரதிர்ஷ்டவசமானது. ராய்ப்பூரில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத் சென்ற வழியில் அவரது தந்தை நுனாவாத் மோதிலால் உடன், அகேரு வாகு என்ற இடத்தில் வைத்து மழை வெள்ளத்தில் காரோடு அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இந்த துயரமான நிகழ்வை எதிர்கொள்ளும் அவர்களது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். இதன் மூலம் ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:வெள்ளத்தால் மூழ்கிய விஜயவாடா.. ஆந்திர மழையால் 10 பேர் உயிரிழப்பு.. பேருந்து, ரயில் சேவைகள் ரத்து!