ஹைதராபாத்: வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் முயற்சியில் தொழில் நுட்பங்கள் அசாதாரண வளர்ச்சி அடையும் வேளையில், அது மனிதனுக்கு எதிர் விளைவுகளையே அதிக அளவில் உருவாக்குகின்றன. இந்த தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்படும் அச்சுறுத்தல்களிலும் முதலில் பாதிக்கப்படுவது பெண்கள் தான்.
அப்படி சமீபத்தில் தொழில்நுட்பத்தில் புரட்சி ஏற்படுத்திய AI எனக் கூறப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், தொழில்நுட்ப வளர்ச்சியைத் தாண்டி அறிவு திருட்டுக்கும், ஆபாச செயல்களுக்கும் கருவியாகச் செயல்படுவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அந்த வகையில், சமீபத்தில் AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் (Deep Fake) வீடியோ ஒன்று வைரலாகி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
பின்னர் அதில் அரசு தலையிட்டு, உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த நிலையில், தற்போது இதே போன்ற ஒரு சம்பவம் மீண்டும் அரங்கேறி இருப்பது, தொழில் நுட்பங்கள் மீது பெரும் நம்பகமற்றத் தன்மையை உருவாக்கி உள்ளது. உலகளவில் ரசிகர்களைக் குவித்துள்ள பிரபல அமெரிக்கப் பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட்-இன் (Taylor Swift) முகத்தைக் கொண்டு, கடந்த வாரம் X சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வந்த டீப் ஃபேக் AI புகைப்படங்கள் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, இத்தகைய இழிவான செயலுக்கு சமூக ஆர்வலர்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களின் ஆதங்கத்தை, கமெண்டுகளின் வாயிலாக வெளிப்படுத்தி வந்தனர். இருப்பினும் AI தொழில் நுட்பத்தைக் கொண்டு உருவாக்கிய அப்புகைப்படங்கள் தொடர்ந்து பெருமளவில் பகிரப்பட்டும், பதிவிறக்கம் செய்யப்பட்டுமே வந்தது. இந்நிலையில், தற்போது டெய்லர் ஸ்விஃப்ட் குறித்து சர்ச் செய்வதை X வலைத்தளம் தடுத்து நிறுத்தியுள்ளது.