உத்தரபிரதேசம்:கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் - பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவினர் இடையே போர் நடந்து வருகிறது. தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் தாக்குதல் காரணமாக இஸ்ரேலில் பணிபுரிந்த புலம்பெயர் தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் சீரமைப்பு பணிகளிலும், பராமரிப்பு பணிகளிலும் ஏற்பட்ட இடையூறுகளை நீக்க புதிய தொழிலாளர்களை பணிக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்து வரப்பட்டது. அந்தவகையில் இஸ்ரேல் அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவில் இருந்து சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்களை இஸ்ரேல் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
இந்தியாவின் உத்தரபிரதேசம், ஹரியான மாநிலங்களில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. போரினால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலில் தொழிலாளர்களாக பணிபுரிய உத்தரபிரதேசத்தில் 7 ஆயிரத்து 94 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஐஐடி அலிகஞ்சில் விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்யும் பணியில் ஒருவாரமாக இஸ்ரேலிய அரசாங்க குழுவுடன் இணைந்து தேசிய திறன் மேம்பாட்டு ஆணையமும் (NSDC) ஈடுபட்டிருந்தது.
இந்த தேர்வில் பிளாஸ்டிரிங் மற்றும் டைல்ஸ் ஒட்டும் பணிக்குத் தொழிலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 7 ஆயிரத்து 94 பேர் இஸ்ரேலில் பணிபுரிவதற்கு விண்ணப்பித்திருந்த நிலையில் 5 ஆயிரத்து 20 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். திறன்மிகு தொழிலாளர்களைத் தேர்வு செய்யும் பணியை உத்தரபிரதேசத்தின் தொழிலாளர் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு துறை சிறப்பு செயலாளர் குணால் சில்கு ஆய்வு செய்தார்.