பெங்களூரு :கர்நாடக மாநிலம் ஜுன்னசந்திரா பகுதியைச் சேர்ந்தவர், கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி தனது திருமண நாளை கொண்டாடி உள்ளார். ஆண்டுதோறும் திருமண நாளில் தனது மனைவிக்கு பரிசு அளிப்பதை வாடிக்கையாக கொண்டு இருந்த அந்த நபர், நடப்பாண்டு தனது தாத்தா உயிரிழந்ததால் மனைவிக்கு பரிசு அளிக்க மறந்து உள்ளார்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி இரவு தனது படுக்கை அறையில் தூங்கிக் கொண்டு இருந்த அவரை, திருமண நாள் பரிசு வாங்கித் தராத ஆத்திரத்தில் மனைவி கத்தியால் குத்தி உள்ளார். திடீர் கத்திக்குத்து சம்பவத்தில் கையில் காயம் ஏற்பட்டு நிலை குலைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த போலீசார் கத்திக் குத்து பெற்ற நபரிடம் நடந்தது குறித்து விசாரணை நடத்தி உள்ளனர். இதில் தனது தாத்தா உயிரிழந்ததால் மனைவிக்கு திருமண நாள் பரிசு வாங்க மறந்து விட்டதாகவும் ஆனால் ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டு இருந்த தன்னை மனைவி கத்தியால் குத்திவிட்டதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் கடந்த மார்ச் 1ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து உள்ளனர். இதனிடையே கணவன் திருமண நாள் பரிசு தராத ஆத்திரத்தில் கத்தியால் குத்தியதாக மனைவி ஒப்புக் கொண்டு உள்ளார். இருவரையும் அழைத்து இருதரப்பு பரஸ்பர பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் ஆலோசனைகள் வழங்கி அனுப்பியதாக தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க :நாட்டின் முதல் நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில்! ரூ.15,400 கோடி மதிப்பிலான திட்டங்கள் - பிரதமர் மோடி தொடங்கி வைப்பு!