புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பாஜக வேட்பாளர் பர்வேஸ் வர்மா அடுத்த முதலமைச்சர் ஆக தேர்வு செய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர்:டெல்லி முதலமைச்சராக இருந்த ஷாஹிப் சிங் வர்மாவின் மகன் தான் பர்வேஸ் வர்மா. இவரது மாமா ஆசாத் சிங் வடக்கு டெல்லி மாநகராட்சி மேயராக இருந்திருக்கிறார். 1977ஆம் ஆண்டு பிறந்த பர்வேஸ் சர்மா டெல்லி பப்ளிக் பள்ளியில் படித்தார். கிரோரி மால் கல்லூரியில் இளநிலை படிப்பை முடித்தவர், பின்னர் எம்பிஏ பட்டமேற்படிப்பு முடித்தார். 2013ஆம் ஆண்டு முதன் முதலாக டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் மெஹ்ராலி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு டெல்லியில் இருந்து வெற்றி பெற்றா். 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 5.78 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
தற்போதைய டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு நீண்ட நாட்களுக்கு முன்பிருந்தே அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான பிரசாரத்தை பர்வேஸ் தொடங்கி விட்டார். குறிப்பாக கெஜ்ரிவாலை அகற்றுவோம், தேசத்தை காப்பாற்றுவோம் என்ற முழகத்துடன் கூடிய பிரசார இயக்கத்தை டெல்லியில் மேற்கொண்டார். டெல்லி நிர்வாகத்தின் தோல்வி, காற்று மாசு உள்ளிட்ட சுற்றுச்சூழல் சீர்கேடுகள், பெண்களின் பாதுகாப்பில் அலட்சியம், யமுனை ஆற்றை தூய்மை படுத்துவோம் என்று சொன்ன வாக்குறுதியை ஆம் ஆத்மி நிறைவேற்றவில்லை என்ற வாதங்களை பிரசாரத்தில் அவர் முன் வைத்தார்.
ரூ.115 கோடி சொத்துகள்:புதுடெல்லி சட்டப்பேரவைத் தொகுதியில் வேட்புமனுவுடன் தாக்கல் செய்த அபிடவிட்டில் தமக்கு ரூ.115.6 கோடி சொத்துகள் இருப்பதாக பர்வேஸ் வர்மா குறிப்பிட்டிருக்கிறார். புதுடெல்லி தொகுதியில் வெற்றி பெற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கட்சி தலைமையும், டெல்லி தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்எல்ஏக்களும் முதலமைச்சர் யார் என்பது குறித்து தீர்மானிப்பார்கள். மேலும் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி ஆம் ஆத்மி கட்சி ஆட்சியின் மீதான ஊழல் குற்றசாட்டுகள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படும்" என்றார்.
பர்வேஸ் வர்மா தவிர வேறு இருவரின் பெயர்களும் முதலமைச்சர் பதவிக்காக பரிசீலிக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. குறி்ப்பாக புதுடெல்லி மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பன்சூரி ஸ்வராஜ் என்பவர் முதலமைச்சர் ஆக்கப்படலாம் என்று தெரிகிறது. இப்போது டெல்லியில் பெண் முதல்வர் அதிஷி பதவி வகிக்கும் நிலையில் , பாஜக சார்பில் பெண் முதலமைச்சர் தேர்வு செய்யப்பட்டால் இவருக்கு வாய்ப்புக்கிடைக்கும் என்று தெரிகிறது. இவர் மறைந்த பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜின் மகள் ஆவார். சுஷ்மா ஸ்வராஜ் மத்திய அமைச்சராகவும், டெல்லி முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
ஸ்மிருதி இரானி?2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை தோற்கடித்ததன் மூலம் புகழ் பெற்றவர் ஸ்மிருதி இரானி. இப்போது டெல்லி தேர்தலில் போட்டியிட பாஜக சார்பில் சீட் கேட்டார். ஆனால், அவருக்கு சீட் கிடைக்கவில்லை. பாஜகவுக்காக டெல்லியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். டெல்லி முதலமைச்சர் வேட்பாளர் பரிசீலனையில் இவரது பெயரும் இருப்பதாக தெரிகிறது.