அயோத்தி:உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில், ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன்கூடிய இக்கோயிலின் தரைத்தள கட்டுமானப் பணிகள் கடந்த ஆண்டு இறுதியில் நிறைவடைந்தது.
அதையடுத்து, கருவறையில் குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்யும் வைபவம் கடந்த ஜனவரி 22 ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது. அவ்விழாவில் பிரதமர்நரேந்திர மோடி பங்கேற்று ராமர் சிலையை பிரதிஷ்டை செய்தார். அதையடுத்து பக்தர்களின் தரிசனத்துக்காக கோயில் திறக்கப்பட்டது. கடந்த ஐந்து மாதங்களாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவரும் நிலையில், ராம பக்தர்களை கவலை கொள்ள செய்யும் தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
அயோத்தியில் அண்மையில் பெய்த மழையின்போது, கருவறை அமைந்துள்ள தரைத்தளத்தின் மேற்கூரையில் நீர்கசிவு ஏற்பட்டுள்ளதாக, கோயில் தலைமை அர்ச்சகரான ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவித்ததாக இன்று தகவல் வெளியானது. கோயில் திறந்து ஐந்து மாதங்களே ஆன நிலையில வெளியான இத்தகவல் ராம பக்தர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இதுகுறித்து கோயில் கட்டுமான குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா கூறும்போது, "கோயிலின் இரண்டாம் தளத்தில் மேற்கூரை திறந்திருப்பதாலும், முதல் தளத்தில் கட்டுமான பணிகள் நடைபெறுவதாலும் தரைத்தளத்தின் மேற்கூரையில் சிறிது நீர் கசிவு ஏற்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும்போது இவ்வாறு நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்டதுதான்," என அவர் கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, "இதனால் கோயிலின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளில் பிரச்னை எதுவும் இல்லை. அனைத்து மண்டபங்களும் தண்ணீரை அகற்றுவதற்கான சாய்தள கட்டமைப்பை பெற்றிருப்பதால், சன்னதி பகுதியில் வடிகால் வசதி இல்லை" என்றும் நிருபேந்திர மிஸ்ரா விளக்கம் அளித்துள்ளார்.
இதனிடையே, பருவமழை காலம் தொடங்குவதற்கு முன்பே இதற்கு தீர்வு காண வேண்டும் என்று கூறி உள்ள தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், இல்லையெனில் கோயில் பூஜைக்கும், பக்தர்களின் வழிபாட்டும் சிக்கல் ஏற்படக்கூடும் எனவும் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க:"தேசிய ஜனநாயக கூட்டணி சபாநாயகருக்கு ஆதரவு... ஆனால்?" - ராகுல் காந்தி போடும் விடுகதை என்ன?