கொச்சி: வயநாட்டில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள கேரளா உதவி கேட்ட நிலையில் மீட்பு பணியில் ஈடுபட்ட விமானங்களுக்கு ரூ.132 கோடி தர வேண்டும் என மத்திய அரசு கேட்டது உளவியல் ரீதியான நகர்வு என கேரள உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 30ஆம் தேதி நேரிட்டநிலச்சரிவில் சிக்கி மூன்று கிராமங்கள் அழிந்து போயின. அந்த கிராமங்களில் இருந்த 231 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் கேரளாவில் இயற்கை பேரிடரை நிர்வகிப்பது, தடுப்பது குறித்து தொடரப்பட்ட வழக்கை கேரள உயர் நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில் நடப்பாண்டு அக்டோபர் 22ஆம் தேதி கேரள அரசின் தலைமை செயலாளருக்கு மத்திய அரசு எழுதிய கடிதத்தில் இந்திய விமானபபடை விமானங்கள் மூலம் 2018ஆம் ஆண்டு கேரளாவில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணிகளுக்கு ரூ.100 கோடி , வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரை மீட்பதற்கான பணிக்கான கட்டணம் ரூ.13 கோடி ஆகியவற்றை தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது குறித்தும் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இது குறித்து இன்று கருத்துத் தெரிவித்த கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.ஜெயசங்கரன் நம்பியார், எஸ்.ஈஸ்வரன் ஆகியோர் அடங்கி அமர்வு, "மத்திய அரசு ரூ.120 கோடியை கேரள அரசுக்கு கொடுத்தால், உடனே அதனை வயநாடு பகுதியில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகளுக்கு உபயோகப்படுத்தலாம்," என்று கூறியது.
இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை... உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மேலும் கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், "வயநாட்டில் மறுசீரமைப்பு பணிகளுக்காக ரூ.120 கோடியை உபயோகிக்கும் வகையில் தேசிய பேரிடர் மேலாண்மை நிதி, மாநில பேரிடர் மேலாண்மை நிதி ஆகியவற்றில் தளர்வு அளித்து அனுமதி அளிப்பதை மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும். இதில் ஒரு உன்னதமான பணி அடங்கியுள்ளது. ஆகவே இதில் மத்திய அரசுக்கு எந்த பிரச்னையும் இருக்கப்போவதில்லை.
வயநாடு பகுதியில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ள நிதி உதவி அளிக்க வேண்டும் என்று மாநில அரசு கேட்ட நிலையில் கடந்த அக்டோபரில் மத்திய அரசின் சார்பில் அனுப்பப்பட்ட ரசீதில் கேரள மாநிலத்தில் பேரிடர் பாதிப்புகளின் போது மீட்புப்பணிகளில் ஈடுபட்ட விமானப்படை விமானங்களுக்கான தொகை ரூ.132 கோடி தர வேண்டும் என்று கேட்கப்பட்டது ஒரு உளவியல் ரீதியிலான நகர்வு. இது போன்ற அனைத்து உளவியல் ரீதியிலான விஷயங்களையும் விட்டு விடுங்கள்.
மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் ஏற்கனவே ரூ.61 கோடி உள்ளது. இப்போது மத்திய அரசின் தரப்பில் கேட்கப்பட்ட விமானப்படை மீட்புப்பணிக்கான ரூ.120 கோடியை விட்டுக் கொடுத்தால் மொத்தம் ரூ.180 கோடியை வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறு சீரமைப்பு பணிகளுக்கு மாநில அரசு உடனே பயன்படுத்த முடியும்,"என்று கூறினர்.
அப்போது வாதிட்ட மத்திய அரசின் வழக்கறிஞர், "தற்காலிகமாக ரூ.120 கோடியைபெற மத்திய அரசின் அனுமதி தேவை. மேலும் ரூ.180 கோடியை உபயோகிக்க மாநில மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் விதிகளை தளர்த்த வேண்டும்," என்றார். இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த நீதிபதிகள்,"ஏற்கனவே குறிப்பிட்ட தொகையை உபயோகிக்க விதிகளை தளர்த்துவது குறித்து மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும்,"என்று கூறினர்.