திருவனந்தபுரம்: கேரளாவை உலுக்கிய கல்லூரி மாணவர் ஷாரோன் ராஜ் கொலை வழக்கில் கைதான இளம்பெண் கிரீஷ்மா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரளாவில் கல்லூரி மாணவர் ஷாரோன் ராஜ் கிரீஷ்மா என்ற பெண்ணை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபரில் ஷாரோன் ராஜுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷாரோன் ராஜ் 11 நாட்கள் தொடர் சிகிச்சைக்கு பிறகு உயிரிழந்தார்.
இதற்கிடையே ஷாரோன்ராஜ் குடும்பத்தார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஷாரோன் ராஜ் மரணிப்பதற்கு முன்பு மாஜிஸ்திரேட்டிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கிரீஷ்மாவுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகளையும் தெரிவிக்கவில்லை. ஆனால், விசாரணை வட்டத்துக்குள் கிரீஷ்மா, அவரது தாய் சிந்து, மாமா நிர்மல் குமார் ஆகிய மூவரும் கொண்டு வரப்பட்டனர். மேலும், விசாரணையில் கிரீஷ்மாதான் ஷாரோன் ராஜுக்கு விஷம் வைத்து கொன்றதாக ஒப்புக்கொண்டார்.
அதன்படி, ஷாரோன் ராஜ், கிரீஷ்மா இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கிரீஷ்மாவுக்கு மற்றொரு வரண் வந்துள்ளது. அதற்கு கிரீஷ்மாவும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால் ஷாரோன் ராஜிடம் இருந்து விலக கிரீஷ்மா முடிவெடுத்துள்ளார். பின்னாளில் அவரை கொல்லவும் திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, முதல் முயற்சியாக ஜூஸில் அதிக அளவு பாராசிட்டமால் மாத்திரைகளை கலந்து குடிக்க வைத்துள்ளார். அதனால் உடல்நலம் பாதித்த ஷாரோன் ராஜ் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு மீண்டு வந்துள்ளார். ஆனால், காதலியின் சதி திட்டத்தை அவர் அறியவில்லை.
இதையும் படிங்க: ஏடிஎம்மில் நிரப்ப இருந்த ரூ.93 லட்சம்... துப்பாக்கிச் சூடு நடத்தி பட்டப்பகலில் கொள்ளை...!
இதனை தொடர்ந்து அடுத்தகட்ட கொலை முயற்சியில் ஈடுபட்ட கிரீஷ்மா கசாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து கொடுத்துள்ளார். அதை குடித்த பிறகு தான் ஷாரோன் ராஜூக்கு தீவிர உடல்நல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. மருத்துவ சிகிச்சையில் இருந்த ஷாரோன் ராஜ் உடல் உறுப்புகள் செயலிழந்து 11 நாட்கள் கழித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த வழக்கில் கைதான கிரீஷ்மா கடந்த ஓராண்டு சிறையில் இருந்து பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். மேலும், போலீஸ் காவலில் இருந்தபோது அவர் தற்கொலைக்கும் முயன்றார். இதனிடையே இந்த வழக்கு விசாரணை நெய்யாற்றின்கரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ஜனவரி 25, 2023 அன்று போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். மொத்தம் 95 சாட்சிகள் விசாரணையுடன் இந்த வழக்கு கடந்த ஜன.3 ஆம் தேதி முடிவடைந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.பஷீர், கொலை (பிரிவு 302) உட்பட இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பல்வேறு பிரிவுகளின் கீழ் கிரீஷ்மாவை குற்றவாளி என அறிவித்தார். அதே சமயம் அவரது மாமா பிரிவு 201 இன் கீழ் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், தண்டனை விவரங்கள் நாளை (ஜன.18) அறிவிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து, குற்றவாளி கிரீஷ்மா மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அட்டகுளங்கரா சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மேலும், இந்த வழக்கில் இரண்டாவது எதிரியாக சேர்க்கப்பட்டிருந்த கிரீஷ்மாவின் தாயார் சிந்து போதிய ஆதாரம் இல்லாததால் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், நீதிமன்றம் உத்தரவு குறித்து ஷாரோன் ராஜின் பெற்றோர் கூறுகையில், கிரீஷ்மாவின் தாயாருக்கும் எங்கள் மகன் கொலையில் தொடர்பு உள்ளது. அவருக்கும் தண்டனை கிடைத்திருக்க வேண்டும். நாளை தண்டனை விவரம் வெளியான பிறகு இதுகுறித்து உயர் நீதிமன்றத்தை நாடுவோம். கிரீஷ்மாவுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்'' என கூறினர்.