மதுரை: தமிழ்நாடு காவல்துறையின் போதை தடுப்பு பிரிவில் டிஎஸ்பி (DSP) ரேங்க் பதவியில் அஸ்ட்ரோ என்ற லேப்ரடார் இனத்தைச் சேர்ந்த மோப்ப நாய் மதுரை மத்திய சிறைச்சாலையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி பணியில் சேர்ந்தது. மதுரை மத்திய சிறைச்சாலையில் சிறைவாசிகளிடையே உள்ள போதைப்பொருள் பழக்கத்தை கட்டுப்படுத்துவதில் இந்த நாயின் பங்கு மிக முக்கியமானது.
சிறைச்சாலைக்குள் தண்டனை அனுபவித்து வரும் சிறைவாசிகள் போதைப்பொருட்கள் வைத்திருக்கிறார்களா? என்பதை கண்காணிக்கும் வகையில் காலை, மாலை என இருவேளையும் அஸ்ட்ரோ மோப்ப நாய் சோதனையில் ஈடுபடுவது வழக்கம். அந்த சோதனையில் ஒருவேளை சிறைவாசிகள் போதைப்பொருட்களை மறைத்து வைத்திருந்தால் துல்லியமாக கண்டுபிடிக்கும் திறன் கொண்டது.
மதுரை மத்திய சிறையில் 10 ஆண்டுகளாக அஸ்ட்ரோ மோப்ப நாய் சிறப்பாக பணியாற்றி வந்தது. இந்நிலையில் நேற்று (ஜவனரி.17) பணியின் போது வயது முதிர்வு காரணமாக அஸ்ட்ரோ மோப்ப நாய் காலமானது. இதனையடுத்து மதுரை மத்திய சிறை டிஐஜி முருகேசன், எஸ்.பி சதீஷ்குமார் மற்றும் ஜெயிலர் கண்ணன் ஆகியோர் உயிரிழந்த அஸ்ட்ரோ மோப்ப நாயை மதுரை மத்திய சிறைச்சாலை வளாகத்திற்குள்ளேயே 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையோடு அடக்கம் செய்தனர். அஸ்ட்ரோ நாய், உயிரிழந்ததால் சிறைச்சாலை பிரிவு அதிகாரிகள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதையும் படிங்க: பணியில் மயங்கி விழுந்து உயிரிழந்த போக்குவரத்து தலைமை காவலர்! அரசு மரியாதையுடன் உடல் தகனம்..
இது குறித்து பேசிய மதுரை மத்திய சிறைத்துறை அலுவலர்கள், “பல்வேறு கால கட்டங்களில் சிறைச்சாலையின் உள்ளே இருந்த போதைப் பொருள் நடமாட்டத்தை மிகத் துல்லியமாக கண்டறிந்தது அஸ்ட்ரோ மோப்ப நாய். அஸ்ட்ரோ ஆற்றிய சேவையை மறக்க முடியாது. காவலர்களே அறிய முடியாத பல்வேறு பகுதிகளுக்குள் நுழைந்து போதைப் பொருட்களை கண்டறிந்து வெளி கொண்டுவந்துள்ளது” என வேதனையோடு பகிர்ந்து கொண்டனர்.