சென்னை: நடிகர் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி தம்பதி விவாகரத்து வழக்கில், இருவருக்கும் இடையேயான சமரச பேச்சுவார்த்தை நிறைவு செய்த பின்னர் விசாரிக்கப்படும் என வழக்கை பிப்ரவரி 15ஆம் தேதிக்கு தள்ளி வைத்து சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் ஜெயம், எம்.குமரன் சன் ஆப் மகாலெட்சுமி, உனக்கும் எனக்கும் (சம்திங் சம்திங்), கோமாளி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகர் ரவி. இவர் ஆர்த்தியை காதலித்துக் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 15 ஆண்டுகளாக திருமண உறவில் வாழ்ந்து வந்த இருவருக்கும் சமீபத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால், இருவரும் தற்போது தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு நடிகர் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்றம், சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டிருந்தது.
இதையும் படிங்க: "சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் எப்படி கொண்டு செல்லப்படுகிறது?" - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!
அதன்படி நடிகர் ரவி மற்றும் ஆர்த்தி ஆகியோர் சமரச தீர்வு மையத்தில் ஆஜராகி பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதுவரை சமரச பேச்சுவார்த்தைக்காக நடிகர் ரவி, ஆர்த்தி ஆகியோர் 3 முறைக்கு மேல் மத்தியஸ்தர் முன் ஆஜராகி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரத்து வழக்கு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன் இன்று (ஜன.18) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நடிகர் ரவி மற்றும் ஆர்த்தி ஆகியோர் காணொலி மூலம் ஆஜராகினர். மேலும், நடிகர் ரவி மற்றும் ஆர்த்தி இடையேயான சமரச பேச்சுவார்த்தைக்காக மத்தியஸ்தர் இன்று அழைத்திருப்பதாக அவர்களின் வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் தெரிவித்தனர். அதனைக் கேட்ட நீதிபதி, சமரச பேச்சுவார்த்தை நிறைவு செய்த பின் விவாகரத்து வழக்கின் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்து வழக்கின் விசாரணையை பிப்ரவரி 15ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.