சென்னை: தமிழ்நாட்டில் சிறார் ஆபாசப் படங்கள் வைத்திருப்பவர்கள், பிறரிடம் பகிர்ந்து கொள்பவர்கள், சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்பவர்களை பிடிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, சமீப காலமாக சமூக வலைத்தளங்கள் மூலமாக அதிகமாக சிறார் ஆபாசப்படங்கள் பகிரப்பட்டு குழந்தைகள் மீதான கொடுங்குற்றச் செயல்களுக்கு காரணமாக அமைவதாகவும், அதற்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மயிலாப்பூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் செல்போனில் சிறார் ஆபாச வீடியோக்களை வைத்திருப்பதாகவும், அதனை அவர் விற்பனை செய்வதாகவும் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில், உயரதிகாரிகள் உத்தரவின் படி விரைந்து சென்ற தனிப்படை போலீசார், அந்த நபரை பிடித்து விசாரித்துள்ளனர்.
அப்போது, அவரது செல்போனை ஆய்வு செய்து பார்த்த போது, அதிலிருந்த வீடியோவைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது, அந்த செல்போனில் ஏராளமாக சிறார்களின் ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளது. மேலும், அந்த வீடியோக்கள் பல செல்போனில் பதிவிடப்பட்டதாகவும் இருந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்துள்ளது.
அதாவது, தனது 14 வயது மகளையே பாலியல் தொழிலுக்குள் தள்ளி, அதனை ஆபாசமாக வீடியோ பதிவு செய்து வைத்ததும், அவற்றை சமூக வலைத்தளங்களில் பணத்திற்காக விற்பனை செய்ததும் அம்பலமாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து, அந்த செல்போனில் இருந்து யார்? யாருக்கெல்லாம் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது? சிறார் வீடியோக்களைப் பார்த்தவர்கள் யார்? மேலும் அந்த வீடியோக்களில் உள்ள மற்ற குழந்தைகள் யார்? என பலக் கோணங்களில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் யார் என்ற பட்டியலை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஆம்னி பேருந்து டூ கார்! கடத்தி வரப்பட்ட புகையிலைப் பொருட்கள் போலீசாரிடம் சிக்கியது எப்படி?
அதனைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், இந்த கொடூரச் செயலுக்கு அவரது மனைவியும் உடந்தையாக இருந்ததாகவும் தெரியவந்த நிலையில், அவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல்துறை தெரிவித்துள்ளனர். மேலும், அவர்கள் மீது போக்சோ, தகவல் தொழில் நுட்ப சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தம்பதியினர் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, சிறார் வீடியோக்களை பார்த்தவர்கள், பகிர்ந்தவர்கள், பதிவிறக்கம் செய்தவர்கள் என அனைவரையும் கண்டறிந்து கைது செய்ய உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரைக் கைது செய்து விசாரணை செய்து வருவதாகவும், சில மாணவிகள் இதில் பாதிக்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களை கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில், இந்த வழக்கு சம்பந்தமாக கோட்டூர்புரம் உதவி ஆணையர் பாரதிராஜனை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார்.