புதுடெல்லி:இந்தியாவில் 10 மாநிலங்களில் உள்ள 31 சட்டமன்ற தொகுதிகளுக்கும், கேரளாவின் வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று (நவ.13) இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வயநாட்டில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி முதல் முறையாக தேர்தலை சந்திக்கிறார்.
வயநாட்டுடன், ராஜஸ்தானில் 7 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 6 தொகுதிகளுக்கும், அசாமில் 5 தொகுதிகளுக்கும், பீகாரில் 4 தொகுதிகளுக்கும், கர்நாடகாவில் 3 தொகுதிகளுக்கும், மத்தியப் பிரதேசத்தில் 2 தொகுதிகளுக்கும், சத்தீஸ்கர், குஜராத், கேரளா மற்றும் மேகாலயாவில் தலா ஒரு தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. வரும் நவம்பர் 23ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வயநாட்டில் ராகுல் காந்தியின் தங்கை பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இவருக்குப் போட்டியாக மாநிலத்தை ஆளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சத்யன் மொகேரி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பாஜகவின் நவ்யா ஹரிதாஸ் ஆகியோர் களம் காண்கின்றனர். தொகுதியை தக்க வைத்துக்கொள்வது மட்டுமின்றி, பிரியங்கா காந்தி தனது சகோதரர் ராகுல் காந்தி பெற்ற வாக்குகளை விட அதிகம் பெறுவாரா என்ற அழுத்தமும் அவர் மேல் இருந்து வருகிறது.
இதையும் படிங்க:வயநாடு இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது; மக்கள் யார் பக்கம்?