ஜல்பைகுரி (மேற்கு வங்கம்): மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள சிலிகுரியில் உள்ள பெங்கால் சஃபாரி பூங்காவில் அக்பர், சீதா எனப் பெயரிடப்பட்ட இரண்டு சிங்கங்களை ஒன்றாக அடைத்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துத்துவா அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷித் கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் சர்க்யூட் பெஞ்சில் மனுத்தாக்கல் செய்துள்ளது. நீதிபதி சவுகதா பட்டாச்சார்யா அமர்வு இந்த மனுவைப் பிப்ரவரி 20ஆம் தேதி விசாரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
திரிபுராவில் உள்ள செபஹிஜாலா விலங்கியல் பூங்காவிலிருந்து பிப்ரவரி 12ஆம் தேதி விலங்குகள் பரிமாற்றத் திட்டத்தின் மூலம் சில விலங்குகள் சிலிகுரியில் உள்ள பெங்கால் சஃபாரி பூங்காவிற்குக் கொண்டு வரப்பட்டது. அதில் 7 வயதில் ஒரு ஆண் சிங்கம் மற்றும் 5 வயதில் ஒரு பெண் சிங்கமும் இருந்துள்ளது.
இந்நிலையில், முகலாய பேரரசரான அக்பரின் பெயரைக் கொண்ட சிங்கத்தையும், புராணங்களில் ராமரின் மனைவியான சீதாவின் பெயரைக் கொண்ட சிங்கத்தையும் ஒன்றாக அடைக்கக்கூடாது என விஷ்வ ஹிந்து பரிஷித் அமைப்பினர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.