டெல்லி:மத்திய டெல்லி பகுதியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட யுபிஎஸ்சி தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் அதிகளவில் இயங்கி வருகின்றன. பழைய ராஜேந்திரா நகர் பகுதியில் இயங்கி வரும் ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் கிழ் தளத்தில் மாணவர்கள் தேர்வுக்காக தயாராகி வந்து உள்ளனர்.
அப்போது பயிற்சி மையத்தின் கீழ் தளத்தில் திடீரென வெள்ள சூழ்ந்தது. கீழ் தளத்தில் வெள்ள நீரில் புகுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் பயிற்சி மையத்தை விட்டு வெளியேற முயற்சிப்பதற்குள் வெள்ள நீர் சூழந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் பயிற்சி மையத்தில் புகுந்த நீரை மோட்டர் மூலம் உறிஞ்சு எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர் மீட்பு பணியில் மூன்று மாணவர்களின் சடலங்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இரண்டு மாணவிகள் உள்பட மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசர் அனுப்பி வைத்தனர். மேலும் திடீர் வெள்ளத்தில் சிக்கிய 14 மாணவர்கள் மீட்கப்பட்டு உள்ளதாகவும் அதில் 3க்கும் மேற்பட்டோர் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மூன்று மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி சிறிது நேரத்திற்கு போர்க்களம் போல் காட்சி அளித்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த துணை காவல் ஆணையர் ஹர்சவர்தன், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.