லண்டன்:ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் தம்பதிகளின் திருமணத்திற்கு பிந்தைய கொண்டாட்டங்களை லண்டனில் நடத்த தொழிலதிபர் முகேஷ் அம்பானி திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவியது. முகேஷ் அம்பானி தனது மகன் மற்றும் மருமகளின் திருமணத்திற்கு பிந்தைய கொண்டாட்டத்திற்காக லண்டனில் உள்ள புகழ்பெற்ற ஏழு நட்சத்திர விடுதியான ஸ்டோக் பார்க் ஹோட்டலை செப்டம்பர் மாதம் வரை முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
பக்கிங்ஹாம் ஷையரில் 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு ஆடம்பரமான ஹோட்டல் தான் இந்த ஸ்டோக் பார்க். ஆடம்பரமான மாளிகை, பல கோல்ப் மைதானங்கள் மற்றும் டென்னிஸ் மைதானங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த சொகுதி விடுதியில் உள்ளன. இந்நிலையில், அனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் தம்பதிகளின் திருமணத்திற்கு பிந்தைய கொண்டாட்டங்கள் இந்த ஸ்டோக் பார்க் நட்சத்திர விடுதியில் 2 மாதங்கள் நடைபெற உள்ளதாக தகவல் காட்டுத்தீ போல் பரவியது.
இந்த விழாவில் இளவரசர் ஹரி, முன்னாள் பிரதமர்கள் டோனி பிளேர், போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. இந்நிலையில், அந்த செய்திகளுக்கு ஸ்டோக் பார்க் நட்சத்திர விடுதியின் நிர்வாகம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக ஸ்டோக் பார்க் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஸ்டோக் பார்க்கில், வழக்கமாக தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி கருத்துத் தெரிவிப்பதில்லை, ஆனால் சமீபத்திய ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் ஸ்டோக் பார்க்கில் எந்தவொரு திருமண கொண்டாட்டங்களும் திட்டமிடப்படவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்த ஹோட்டலை இந்திய பண மதிப்பில் சுமார் 614 கோடி ரூபாய்க்கு குத்தகைக்கு வாங்கியது. அப்போதிருந்து, சொகுதி விடுதி பொது மக்களின் வருகைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் அம்பானி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் இங்கு அடிக்கடி வந்து செல்வதாக தகவல் கூறப்படுகிறது.
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் கடந்த ஜூலை 12ஆம் தேதி மும்பையில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திரைப் பிரபலங்கள், அரசியல் பிரமூகர்கள், விளையாட்டு முகங்கள் என பலரும் பிரம்மாண்ட விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஏறத்தாழ 5 ஆயிரம் கோடி ரூபாய் வரை அனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் தம்பதிகளின் திருமணத்திற்கு செலவானதாக தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அமித் ஷா குறித்த அவதூறு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி வாக்குமூலம்! - Rahul Gandhi