திருப்பூர்: அன்றாட வாழ்வில் வேலைக்கு செல்பவர்களும், ஊர் பயணம் மேற்கொள்ளுபவர்களும் பெரிதாக நம்பி இருக்கும் நிலவழி வாகனம் ரயில் சேவையாகும். இந்த சூழலில் தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு செல்லும் மேற்கு மண்டல ரயில்களில் ரயில் நிறுத்தங்களிலும், சீட் ஒதுக்கீட்டிலும் கேரள பயணிகள் அதிக பயனடைவதாகவும், தெற்கு ரயில்வே தமிழக ரயில் பயணிகளிடம் ஓரவஞ்சகமாக இருப்பதாகவும் தமிழக ரயில் பயணிகள் குற்றச்சாட்டி வருகின்றனர்.
இது குறித்து, பேசிய ரத்னா அறக்கட்டளை தலைவர் ரத்னா மனோகர், "தெற்கு ரயில்வே சார்பாக சென்னை- கேரளா மார்கமாக 90க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகிறது. அந்த மார்கத்தில் செல்லும் ரயில்கள் தமிழ்நாடுக்குள் பல முக்கிய ரயில் நிலையங்களை கடந்து சென்றாலும், வெறும் 4 இடங்களில் மட்டுமே நிறுத்தம் கொண்டுள்ளது.
ஆனால் அதுவே கேரளாவிற்கு சென்ற பிறகு அதே ரயில் 4 மடங்கு அதிகமாக 16 இடங்களில் நிறுத்தம் கொண்டுள்ளது. கேரளாவில் இருக்கும் நிறுத்தங்கள் அனைத்தும் குறைவாக மக்கள் வசிக்கும் பகுதியாக உள்ளது. சில இடங்களில் குட்கிராமங்களில் கூட ரயில்கள் நிறுத்தப்படுகின்றனர்.
தெற்கு ரயில்வேயில் கேரள அதிகாரிகள் அதிகளவில் உள்ளதால், இது போன்று ஓரவஞ்சனை செயல்கள் நடக்கிறது என மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். இந்தியா சமத்துவம் நிறைந்து நாடு என கூறும்போது, ஏன் ஒவ்வொரு மாநிலத்திற்கு தனி தனி நீதியாக உள்ளது. இது குறித்து மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் இது குறித்து பேச வேண்டும். மத்திய ரயிவே அமைச்சர், தெற்கு ரயில்வே மேளாலருக்கு இந்த பிரச்னைகள் களைய உத்தரவிட வேண்டும்," என்றார்.
தொடர்ந்து பேசிய ராஜஸ்தான் வர்த்தகர் சந்தன் சிங், "ராஜஸ்தானில் இருந்து தமிழ்நாட்டுக்கு வணிகம் செய்ய ஏராளமானவர்கள் வருகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ், அந்தோதயா எக்ஸ்பிரஸில் பயணிப்பவர்கள். ஆனால் இந்த ரயில்களில் தமிழகத்தில் பெரும்பாலான நிறுத்தங்கள் இல்லை. கேரளாவில் தான் அதிகபடியான நிறுத்தங்கள் உள்ளது. தமிழகத்திலும் அதிகளவிலான நிறுத்தங்கள் இருந்தால் பயனுள்ளதாக இருக்கும்," என்றார்.
தொடர்ந்து பேசிய ரயில் பயணி உமா மகேஷ்வரி, "திருப்பூர் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் நாங்கள். நாங்கள் அதிகளவில் ரயிலில் பயணிப்பவர்கள். கேரளாவில் மட்டும் முன்பதிவு செய்யப்படாத பேட்டிகள் 8-18 பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் முக்கிய தொழில் மாவட்டங்களான திருப்பூர், கோயம்புத்தூர், சேலம், ஈரோடு உள்ளது. இந்த மாவட்டங்களுக்கு பயணம் செய்ய அதிகளவிலான பயணிகள் உள்ளனர்," என்றார்.
இதையும் படிங்க: பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா.. அப்போ இத தெரிஞ்சுக்கோங்க - சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
இந்நிலையில், ரயில்களின் வருகை நேரம் மற்றும் கண்காணிப்பு டிராக்கராக இருக்கும் வேரிஸ் மை ட்ரெயின் ஆப்பில் இருக்கும் தரவுப்படி, "தமிழ்நாட்டில் இருந்து கேரளா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் 50 கிலோமீட்டர் தூரத்துக்கு குறைவாக நிறுத்தம் இல்லை. அதே ரயில் கேரளாவுக்குள் செல்லும் போது 7 கிலோமீட்டர், 10 கிலோமீட்டர், 20 கிலோமீட்டர்களில் அமைந்திருப்பதை காண முடிகிறது.
இதில், சென்னை - திருவனந்தபுரம் செல்லும் (ரயில் எண்:12623) திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் திருவள்ளூர், அரக்கோணத்தில் கூட நிற்காமல் 129 கிலோ மீட்டர் தூரம் செல்கிறது. பின், காட்பாடியில் இருந்து புறப்பட்டு ஜோலார்பேட்டை, மொரப்பூர், பொம்மிடி ரயில் நிலையங்களை தவிர்த்து விட்டு, அடுத்த 100 கிலோமீட்டர் தூரம் நிற்காமல் சேலத்தில் தான் நிறுத்தப்படுகிறது.
அங்கிருந்து ஈரோட்டில் நிறுத்தினால் பிறகு தொழில் நகரமான திருப்பூர ரயில் நிலையத்தையே தவிர்த்து விட்டு, நேரடியாக கோவையில் நிறுத்தப்படுகிறது. இப்படி இந்த ரயில் சென்னையில் இருந்து கோவை வரைக்கும் 494 கிலோ மீட்டர் தூரத்துக்கு நான்கே ரயில் நிலையங்களில் தான் நிறுத்தப்படுகிறது.
ஆனால் அதே ரயில் பாலக்காடு, திரிச்சூர் என்ற முக்கிய ரயில் நிலையங்களை கடந்து அங்கமாலி ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுகிறது. பின்னர் அங்கிருந்து 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆலுவா, ஆலுவாவில் இருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் எர்ணாகுளம், எர்ணாகுளத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில்திருப்புணித்துறா ரயில் நிலையங்களில் நிறுத்தப்படுகிறது.
இதையும் படிங்க: தண்ணீர் தொட்டிகளால் ஏற்பட்ட பெரும் மாற்றம்! யானை - மனித மோதல் குறைய காரணம் என்ன?
இதுமட்டும் இல்லாமல் இதே ரயில் கோட்டையம், கோட்டையத்தில் இருந்து சங்கனச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவெலிக்கரா, காயங்குளம், கொல்லம், வர்க்கலா, திருவனந்தபுரம் தெற்கு, வடக்கு என சாதாரண பாசஞ்சர் ரயில் போல நிறுத்த வசதி செய்து இருக்கிறார்கள். சென்னையில் இருந்து கோவை வரை 494 கிலோ மீட்டர் தூரத்துக்கு நான்கே நிறுத்தங்களில் நிறுத்தப்படும் இந்த ரயில் கேரளத்திற்குள் 424 கிலோ மீட்டர் தூரத்துக்கு 16 நிறுத்தங்களில் நிறுத்தப்படுகிறது.
இப்படி சென்னையில் இருந்து செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டும் இல்லாமல், காட்பாடி, சேலம், ஈரோடு வழியாக செல்லக்கூடிய எல்லா ரயில்களுக்குமே இதே பின்பற்றுகின்றன.
இதுமட்டுமின்றி ரயில் எண் 06802 என்ற எண்ணில் கோவை - சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை முழுமையாக ரத்து செய்துள்ள தெற்கு ரயில்வே, அதே ரயிலை 06805, 06806 என்ற எண்களில் கோவையில் இருந்து பாலக்காட்டுக்கு இயக்குகிறது. அந்த ரயிலை 3 ஆண்டுகளாக சேலத்துக்கு இயக்குமாறு ரயில்வே அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை விடுத்ததும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தமிழ்நாட்டில் நிறுத்தங்கள் குறைவதால் 24 சிறிய ரயில் நிலைய பயணிகள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.