தஞ்சாவூர்: தஞ்சை அருகே குலமங்கலம் வடக்குதெருவை சேர்ந்தவர் நிதிஷ் குமார் (25). கட்டிட ஒப்பந்ததாரரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிதிஷ் குமார் சமூக வலைதளத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது, கார் வாடகை ஒப்பந்தத்தின் மூலம் அதிகம் லாபம் பெறலாம் என்ற விளம்பரம் பார்த்துள்ளார். இதைப் பார்த்த நிதிஷ் குமார் அந்த விளம்பரத்தில் இருந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
எதிர் முனையில் பேசியவர், தான் சென்னை பூந்தமல்லியை சேர்ந்த அசோக் குமார் (37) என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். தொடர்ந்து தன்னிடம் ஏராளமான கார்கள் இருப்பதாகவும், அந்த கார்களை வைத்து வாடகை ஒப்பந்தம் செய்யும் தொழில் செய்து வருவதாகவும், என்னிடம் காரை வாங்கி அதிக லாபம் பெறலாம் என நிதிஷ் குமாருக்கு ஆசை வார்த்தை காட்டியுள்ளார்.
இதனை நம்பிய நிதிஷ் குமார், உடனடியாக அவரை நேரில் அழைத்து பேசி வாடகை ஒப்பந்தம் செய்து காரை வாங்கினார். பின்னர் வாடகை ஒப்பந்த தொகையான ரூ. 5.50 லட்சத்தை அசோக் குமாரிடம் கொடுத்து ஒப்பந்தம் செய்து கொண்டார். இவ்வாறு ஒப்பந்தம் செய்த சில நாட்களுக்கு பின்னர் நிதிஷ் குமாரிடம் வந்த ஒருவர், தான் காரின் உரிமையாளர் என கூறி, நிதிஷ் குமாரிடம் இருந்து, அசோக் குமார் கொடுத்த காரை வலுக்கட்டாயமாக பெற்று ஓட்டி சென்று விட்டார்.
இதையும் படிங்க: நெல்லையே ஆடிப்போன வழக்கு.. பாலியல் தொல்லை, ஆசிட் வீச்சு.. குற்றவாளிக்கு கோர்ட் அளித்த தீர்ப்பு..!
இதனால் அதிர்ச்சியடைந்த நிதிஷ் குமார், இது குறித்து அசோக் குமாரை தொடர்பு கொண்டு கார் குறித்து கேட்டபோது, சரியான பதில் கூறாமலும், வாடகை ஒப்பந்த பணத்தை தராமலும் இழுத்தடித்துள்ளார்.
இதையடுத்து நிதிஷ் குமார் தஞ்சை தாலுகா போலீசில், இது குறித்து புகார் செய்தார். இதன் பேரில் தாலுகா போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் முத்து குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அசோக் குமாரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அதிர்ச்சி தகவல்
அசோக் குமார் தமிழகம் முழுவதும் பல்வேறு கார் உரிமையாளர்களிடம் கார்களை வாங்கி கொண்டு, அதை 3-ம் நபர்களிடம் தன்னுடைய சொந்த கார் என கூறி வாடகை ஓப்பந்தம் செய்து பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், கார் உரிமையாளர்களிடம் வாடகைக்கு கார்களை பெற்று, முறையாக உரிமையாளர்களுக்கு வாடகை தராமல் ஏமாற்றியதும் தெரிய வந்தது. இது போல் தான் ஒரு கார் உரிமையாளரிடமிருந்து பெற்ற காரை நிதிஷ் குமாரிடம் கொடுத்து இருந்ததும், அதற்கு உரிய வாடகை தராததால் உரிமையாளர் நேரடியாக வந்து காரை எடுத்து சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து தாலுகா போலீசார் அசோக் குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி தஞ்சை கிளை சிறையில் அடைத்தனர்.