கொல்கத்தா :விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சிகள் தங்களது வேட்பாளர்களை இறுதி செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அண்மையில் 195 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை பாஜக வெளியிட்டது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி 39 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டது.
இந்நிலையில், மேற்கு வங்கம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி குறித்து அலோசிக்கப் போவதில்லை என தெரிவித்து இருந்த ம்மதா பானர்ஜி, மொத்தமுள்ள 42 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து உள்ளார்.
கொல்கத்தா பிரிகேட் பரேட் மைதானத்தில் நடந்த பேரணியில் தோன்றிய மம்தா பானர்ஜி கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார். முன்னணி நடிகர் நுசரத் ஜஹானுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பேனர்ஜி வெளியிட்டார்.
இதில் டைமண்ட் ஹார்பர் தொகுதியில் அபிஷேக் பானர்ஜி போட்டியிட உள்ளார். அவரைத் தொடர்ந்து இந்திய அனியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் பஹரம்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி மஹுவா மொய்த்ராவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.