தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டி.எம்.கிருஷ்ணா விருது விவகாரம்; பாடகர்கள் ரஞ்சனி, காயத்ரிக்கு மியூசிக் அகாடமி கண்டனம்! - TM Krishna award issue - TM KRISHNA AWARD ISSUE

TM Krishna issue: கர்நாடக இசை பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டதற்கு ரஞ்சனி, காயத்ரி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கர்நாடக மியூசிக் அகாடமி தலைவர் அவர்களுக்கு கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

டி.எம்.கிருஷ்ணா விருது விவகாரம்
டி.எம்.கிருஷ்ணா விருது விவகாரம்

By ANI

Published : Mar 21, 2024, 7:41 PM IST

சென்னை: பிரபல கர்நாடக இசை பாடகரான டி.எம்.கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருது கர்நாடக இசைக் கலைஞர்களால் மிகவும் உயரிய விருதாக கருதப்படுகிறது. கர்நாடக மியூசிக் அகாடமியின் செயற்கை குழு கூட்டத்தில் இந்த விருது குறித்து முடிவு செய்யப்பட்டது.

பிரபல கர்நாடக இசைப் பாடகர் செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், சங்கீத கலா ஆச்சார்யாஸ் பகவதுல சீதாராம சர்மா மற்றும் செங்கல்பட்டு ரெங்கநாதன் ஆகியோரின் மாணவரான டி.எம்.கிருஷ்ணா, பெரியாருக்கு ஆதரவு தெரிவித்து முற்போக்கு சிந்தனைகளுடன் பல்வேறு பாடல்களை கர்நாடக இசை மூலம் பாடியுள்ளார்.

உதாரணமாக, சென்னை கடற்கரையில் ஊரூர் ஆல்காட் குப்பம் பகுதியில், பல்வேறு இசைக் கலைஞர்களை கொண்டு இசைத் திருவிழாவை நடத்தினார். மேலும் பெரியார், அம்பேத்கர் பற்றி பல்வேறு மேடைகளில் பேசியுள்ள டி.எம்.கிருஷ்ணா, சில ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கர் ஜெயந்தி அன்று காவடிச் சிந்து பாடலை பாடினார்.

இந்நிலையில், டி.எம்.கிருஷ்ணாவுக்கு வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் 98வது மார்கழி இசை நிகழ்ச்சியில், சங்கீத கலாநிதி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கர்நாடக மியூசிக் அகாடமியின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு கர்நாடக இசைக் கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரபல கர்நாடக இசைக் கலைஞர்களான ரஞ்சனி, காயத்ரி ஆகியோர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்கப்படும் மார்கழி இசை நிகழ்ச்சியை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து ரஞ்சனி, காயத்ரி ஆகியோர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கர்நாடக இசை உலகின் உயரிய விருது தவறான நபருக்கு வழங்கப்படுகிறது. பிராமணர்கள் இனப்படுகொலை, பெண்களை பற்றி பலமுறை இழிவாக பேசிய பெரியாரை பற்றி டி.எம்.கிருஷ்ணா பல்வேறு மேடைகளில் புகழ்ந்து பேசியுள்ளார். நமது நம்பிக்கைகள், நாட்டின் அடித்தளம் மற்றும் கலாசாரத்தை இழிவுபடுத்தி பேசும் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்கும் நிகழ்வை புறக்கணிக்கிறோம்" என கூறியுள்ளனர்.

ரஞ்சனி, காயத்ரி ஆகியோரின் அறிக்கைக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “டி.எம்.கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது வழங்கப்படுவதற்கு இசை உலகில் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டி.எம்.கிருஷ்ணாவின் சமூக நம்பிக்கை மற்றும் பெரியாரின் மீது கொண்ட ஈடுபாட்டால், அவர் வெறுப்புகளை சம்பாதித்து வருகிறார்.

பெரியாரின் கருத்துக்களை நாம் படித்தால், அவர் மிகப்பெரிய பெண்ணியவாதி என்பது புரியும். டி.எம்.கிருஷ்ணாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு கருத்து சுதந்திரத்தில் நம்பிக்கை இல்லை என நினைக்கிறேன்” என கூறியுள்ளார். இந்நிலையில் ரஞ்சனி, காயத்ரி ஆகியோருக்கு மியூசிக் அகாடமி பதிலளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து மியூசிக் அகாடமி தலைவர் முரளி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மார்ச் 20ஆம் தேதி உங்களது கடிதத்தை பெற்றேன். அதில் மூத்த இசைக் கலைஞருக்கு எதிராக தேவையற்ற அவதூறு கருத்துக்கள் இடம் பெற்றிருந்தது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருது மிக உயரிய விருது என்பதை நீங்கள் அறிவீர்கள். கர்நாடக இசையில் சிறந்து விளங்கியதன் காரணமாக, டி.எம்.கிருஷ்ணாவுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. அனைவரையும் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சங்கீத அகாடமி மாநாட்டில் இருந்து விலகுவதற்கான உங்கள் முடிவை நாங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்கிறோம். நீங்கள் மியூசிக் அகாடமிக்கு அனுப்பிய கடிதத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தது மரியாதைக்குரிய செயல் அல்ல. கர்நாடக இசை உலகிற்கு நீங்கள் ஆற்றிய பங்களிப்பை கருத்தில் கொண்டு நாங்கள் உங்களுக்கு பதில் அளிக்கத் தவறவில்லை” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க:சேச்சி, சேட்டன்மார்கள் வேற லெவல்.. ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசிய விஜய்!

ABOUT THE AUTHOR

...view details