புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் ரெட்டியார்பாளையம் புதுநகரில் உள்ள பாதாள சாக்கடையில் இருந்து விஷவாயு கசிந்து, அது வீட்டின் கழிவறைகள் வழியாக வெளியேறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள வீட்டுக்குள் சென்ற 85 வயது மூதாட்டி செந்தாமரை மயங்கி விழுந்துள்ளார். இதனைக் கண்டு அவரைக் காப்பாற்றச் சென்ற அவரது மகள் காமாட்சி (45) மயங்கி விழுந்தார்.
எம்எல்ஏ சிவசங்கரன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) இதனைக் கேள்விபட்ட உறவினர்கள், இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். இதேபோல் பக்கத்து தெருவில் உள்ள ஒரு சிறுமி, விஷ வாயு தாக்கி மயக்கமுற்ற நிலையில், அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழக்க, பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
மேலும், ஒரு சிறுமி உள்ளிட்ட 4 பேர் விஷ வாயு தாக்கி, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்பகுதியில் விஷ வாயு பரவுகிறதா? என்பது குறித்து நகராட்சி ஊழியர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பத்தை தொடர்ந்து மக்கள் வீட்டை விட்டு வெளியேற காவல்துறையினர் ஒலிப்பெருக்கி வாயிலாக அறிவுறுத்தி வருகின்றனர்.
மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார். ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வரும் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், காலை 11 மணி வரையில் நடத்தப்பட்ட சோதனையில், பாதாள சாக்கடையில் எங்கும் விஷ வாயு கசிவு இல்லை என தெரிய வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ரெட்டியார்பாளையம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பராமரிக்கும் நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்வதாக புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து உழவர்கரை தொகுதி எம்எல்ஏ சிவசங்கரன் கூறுகையில், "ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில், இன்று காலை கழிவறையில் இருந்து வந்த மீத்தேன் கசிவால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நான்கு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தை தொடர்ந்து மாநில சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை அனைவரின் உதவியோடு, இப்பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றி உள்ளோம். இப்பகுதி மக்களுக்கு வாந்தி, கண் எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏதும் உள்ளதா? என மருத்துவ பரிசோதனை செய்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:தென் தமிழக கடலோர மக்களுக்கு நாளை வரை 'கள்ளக்கடல்' எச்சரிக்கை.. கடலோரம் செல்ல தடை! - Kallakadal alert in Tamil Nadu