தியோகர்: ஜார்கண்ட் மாநிலத்தின் பாம்பாம் பகுதியில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு உள்ள நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் நிலவுகிறது. பாம்பாம் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருவதால் அதனால் கட்டடம் பாழடைந்து காணப்படுவதாகவும் இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1994ஆம் ஆண்டு கட்டடம் கட்டப்பட்ட நிலையில், தற்போது தரைதளத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டு இருந்ததாகவும், அதைத் தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது மாடியில் குடும்பங்கள் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கனமழையால் பாழடைந்து போன கட்டடம் அதிகாலை வேளையில் சரிந்து விழுந்ததால் தூங்கிக் கொண்டு இருந்த அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுவரை 3 பேரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டு உள்ள நிலையில் நான்கு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் மோசமான நிலையில் இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.