அலிகர்க்:மக்களவை தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் அலிகர்கில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொது மக்களின் சொத்துகளை கணக்கெடுத்து மீண்டும் பங்கீடு செய்யும் அதில் பெண்களின் மாங்கல்யத்தின் மீது கூட அவர்களுக்கு (காங்கிரஸ் கட்சிக்கு) ஒரு கண் உண்டு என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
பொது மக்களின் சொத்துக்கள் மற்றும் செல்வங்களை கணக்கீடு செய்து அதை மறுபங்கீடு செய்ய காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு உள்ளதாகவும், ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகிய இரண்டு இளவரசர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட வாரிசு அரசியல், ஊழல் உள்ளிட்ட கொடுஞ் செயல்களுக்கு அலிகர்க் மக்கள் அஞ்சமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.
காங்கிரஸ் இளவரசர் ராகுல் காந்தி தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் யாரார் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் எவ்வளவு சொத்து மதிப்பு கொண்டு இருக்கிறார்கள் என கணக்கிடுவோம் என்று தெரிவித்து உள்ளதாக கூறினார். மேலும், நம்ம தாய் மற்றும் சகோதரிகளின் தங்கத்தை கூட அவர்கள் கணக்கிடுவார்கள் என்றும் பெண்களின் மாங்கல்யத்தை கூட அவர்கள் விட்டு வைக்க மாட்டார்கள் பிரதமர் மோடி தெரிவித்தார்.
கிராமமோ, நகரமோ உங்களது உழைப்பில் வாங்கிய வீடுகளில் ஒன்றை காங்கிரஸ் எடுத்துக் கொள்ளும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். மேலும், இது கம்யூனிஸ்ட் சித்தாந்தம் என்றும் இந்த கொள்கைகள் மூலம் அவர்கள் ஏற்கனவே பல நாடுகளை நாசமாக்கியுள்ளதாகவும் கூறினார். இப்போது இதே கொள்கையை காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணியும் கையில் எடுத்து நாடு முழுவதும் அமல்படுத்த திட்டமிட்டு உள்ளதாக கூறினார்.