ஐதராபாத் :இன்று (மார்ச்.3) உலக தோசை தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகளவில் தோசைக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நவீன யுகத்தில் என்ன தான் புது புது பாஸ்புட் உணவுகள் வந்தாலும் தோசைக்கு என தனி ரசிகர் பட்டாளம் ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது. அதற்கு ஏற்ற வகையில் விதவிதமான தோசைகள் விற்கப்படுகின்றன.
மொறு மொறு என சுடும் தோசைக்கு வகை வகையான சட்னி, சாம்பார் என தொட்டும் சாப்பிடும் போது நாவில் ஊறும் எச்சிலை யாராலும் தடுக்க இயலாது. அந்த அளவுக்கு தென் இந்திய மக்களின் உணவு பட்டியலில் தோசை அடையாளமாகவும் முக்கிய இடத்தையும் பிடித்து உள்ளது என்றால் அது தான் நிதர்சனமான உண்மை.
அதேநேரம் குறிப்பிட்ட சில கடைகளில் மட்டுமே கிடைக்கக் கூடிய வித விதமான மற்றும் ஸ்பெஷல் தோசைகளை நேரில் சென்று சாப்பிட முடியாத சூழலில் சிலர் சிக்கிக் கொண்டாலும், அந்த கவலையை போக்கும் வகையில் ஸ்விக்கி, சொமேட்டோ உள்ளிட்ட உணவு விநியோக சங்கிலி நிறுவனங்கள் பணியாற்றி வருகின்றன.
இந்நிலையில், உலக தோசை தினத்தை முன்னிட்டு பிரபல உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி வெளியிட்ட தரவுகள் படிப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் அமைந்து உள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் ஸ்விக்கி நிறுவனம் ஏறத்தாழ 2 கோடியே 90 லட்சம் தோசைகளை டெலிவிரி செய்து உள்ளதாக தெரிவித்து உள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி தொடங்கி, நடப்பாண்டு பிப்ரவரி 25ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் இந்த 2 கோடியே 90 லட்சம் தோசைகளை டெலிவிரி செய்து உள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்து உள்ளது. மேலும், குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு கூறுகையில் ஒரு நிமிடத்தில் 122 தோசைகள் டெலிவிரி செய்யப்பட்டு உள்ளதாக ஸ்விக்கி கூறி உள்ளது.
பெங்களூரு, ஐதராபாத் மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் தான் அதிகளவில் தோசை டெலிவிரி செய்யப்பட்டு உள்ளதாகவும், இதற்கு விதிவிலக்காக கோயம்புத்தூரை சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் கடந்த ஓராண்டில் 447 பிளேட் தோசை ஆர்டர் செய்து தோசை சாம்பியன் பட்டம் வென்றதாக ஸ்விக்கி நிறுவனம் குறிப்பிட்டு உள்ளது.
அதிக விற்பனையாகும் பட்டியலில் தோசையின் தலைநகரான பெங்களூரு தொடர்ந்து முதலிடம் இருப்பதாகவும், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு ஈடாக டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களிலும் அதிகளவில் தோசை ஆர்டர் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வெண்ணை பரோட்டாவுக்கு பெயர் போன சண்டிகரில் கூட மசாலா தோசை பலரது விருப்பமான உணவாக மாறி அதிக ஆர்டர்கள் வந்து உள்ளதாக ஸ்விக்கி கூறி உள்ளது. உலக கோப்பை கிரிக்கெட், ஐபிஎல், ரமலான் மாதங்களில் அதிகளவில் தோசை விநியோகம் நடந்ததாக ஸ்விக்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க :பாஜக சீட் தர மறுப்பு: அரசியலில் இருந்து விலகுவதாக ஹர்ஷ் வர்தன் அறிவிப்பு! விரக்தியா?