தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்தது...மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் நாளை பதவி ஏற்பு! - DEVENDRA FADNAVIS

மகாராஷ்டிரா முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ் நாளை பதவி ஏற்க உள்ளார். மும்பையில் நடைபெற்ற பாஜகவின் மைய குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தேவேந்திர பட்நாவிஸ்
தேவேந்திர பட்நாவிஸ் (Image credits-IANS)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 4, 2024, 12:22 PM IST

மும்பை: மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக தேவேந்திர பட்நாவிஸ் நாளை பொறுப்பேற்கிறார். மும்பையில் நடைபெற்ற பாஜகவின் மைய குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் மகாயுதி கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாஜக 132 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சிவசேனா 57 தொகுதியிலும், தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதையடுத்து மகாயுதி கூட்டணியில் யார் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார் என்பது குறித்து மும்பையிலும், டெல்லியிலும் ஆலோசனைகள் நடைபெற்றன.

சிவசேனா கட்சி 57 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றிருந்தாலும் கூட பீகார் பாணியை பின்பற்றி ஏக்நாத் ஷிண்டேவை முதலமைச்சராக்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பாஜக தலைமையிடம் வேண்டுகோள் விடுத்தனர். எனினும், பாஜக தரப்பில் இருந்தே முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என்று டெல்லி மேலிடம் கூறியதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் எந்த ஒரு முடிவுக்கும் கட்டுப்படுவதாக ஏகநாத் ஷிண்டே அறிவித்தார்.

இதையும் படிங்க:வைரல் வீடியோ: கழுத்தளவு தண்ணீர்; பாகுபலி பட பாணியில் குழந்தையை மீட்ட இளைஞர்!

இந்த நிலையில் 5ஆம் தேதி மகாராஷ்டிரா முதலமைச்சர் பதவி ஏற்பு விழா நடைபெறும் என்று தகவல் வெளியானது. முதலமைச்சர் யார் என்பதை தீர்மானிக்காமல் முதலமைச்சர் பதவி ஏற்பு விழா 5ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மும்பையில் இன்று நடைபெற்ற பாஜக மைய குழு கூட்டத்தில் மகாராஷ்டிரா முதலமைச்சராக தேவேந்திர பட்நாவிஸ் பதவி ஏற்பார் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை மும்பையில் நடைபெற உள்ள மகாயுதி கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டத்திலும் தேவேந்திர பட்நாவிஸ் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார். இதனைத் தொடர்ந்து ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார்.

யார் இந்த தேவேந்திர பட்நாவிஸ்?:மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பிறந்தவர் தேவேந்திர பட்நாவிஸ். அவரது தந்தை கங்காதர் பட்நாவிஸ் ஜன் சங்கம் அமைப்பில் இருந்து வந்தார். தேவேந்திர பட்நாவிஸ் தமது கல்லூரி காலகட்டத்தில் அரசியல் ஆர்வம் கொண்டிருந்தார். பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியில் உறுப்பினராக இருந்தார். 1992 ஆம் ஆண்டு 22 ஆவது வயதில் நாக்பூர் மாநாகராட்சி கவுன்சிலர் ஆனார். 1997ஆம் ஆண்டு நாக்பூர் மாநகராட்சி மேயராக ஆனார்.

2014ஆம் ஆண்டு அக்டோபரில் நடந்த மகாராஷ்டிரா மாநில தேர்தலில் நாக்பூர் தெற்கு மேற்கு தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். மகாராஷ்டிரா மாநிலத்தின் 18ஆவது முதலமைச்சராக தேவேந்திர பட்நாவிஸ் கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி முதல் 2019ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி வரை ஐந்து ஆண்டுகள் பதவி வகித்திருக்கிறார். கடந்த ஏக்நாத் ஷிண்டே அமைச்சரவையில் தேவேந்திர பட்நாவிஸ் துணை முதலமைச்சராக பதவி வகித்தார். இப்போது மீண்டும் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக அவர் நாளை பதவி ஏற்க உள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details