தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மசோதாக்கள் நிலுவை விவகாரம்: ஆளுநரின் நடவடிக்கையால் அரசு நிர்வாகத்தில் 'முட்டுக்கட்டை' ஏற்படும் - உச்ச நீதிமன்றம் கவலை! - TN GOVERNOR GOVT ROW

மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்காமல், சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் அவற்றை நிறுத்தி வைத்தால் அரசு நிர்வாகத்தில் "முட்டுக்கட்டை" ஏற்படும் என்று உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 7, 2025, 11:04 PM IST

புதுடெல்லி:மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்காமல், சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் அவற்றை நிறுத்தி வைத்தால் அரசு நிர்வாகத்தில் "முட்டுக்கட்டை" ஏற்படும் என்று உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் முழுமையாக முட்டுக்கட்டை ஏற்படுத்த முடியாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடல் மற்றும் தேர்வுக் குழுக்களை அமைப்பது தொடர்பான சட்டத்திருத்த மசோதா உட்பட தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு மாநில ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமத்தை அடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று நடைபெற்றது. அப்போது, நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, 'தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமது ஒப்புதலுக்காக தமிழக அரசால் அனுப்பப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவரின் பார்வைக்கு அனுப்பியுள்ளார். அவரும் இவை ஏற்புடையதல்ல எனக் கூறி திருப்பி அனுப்பியுள்ளதால், இந்த விஷயத்தில் ஒரு 'முட்டுக்கட்டை' ஏற்பட்டுள்ளது.' என்று தெரிவித்தனர்.

மேலும், ' தமிழக அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு , மீண்டும் மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு பரிந்துரைத்தாரா?' என்று ஆளுநர் தரப்பு வழக்கறிஞரான ஆர்.வெங்கடரமணியிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, ' மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பான தேடுதல் மற்றும் தேர்வுக் குழுக்களை அமைப்பு குறித்த தமிழக அரசின் சட்டத்திருந்த மசோதா, பல்கலைக்கழக வேந்தரான ஆளுநரின் அதிகாரத்தை பறிக்கும் விதத்தில் உள்ளது. யுஜிசி விதிமுறைகளின்படி, தேர்வு மற்றும் தேர்வுக் குழுவை அமைக்கும் அதிகாரம் தமக்குதான் உள்ளதென்று ஆளுநர், மாநில அரசுக்கு முறையாக தெரிவித்துள்ளார்.' என்று மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் வெங்கடரமணி தமது வாதத்தை முன்வைத்தார்.

'மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா, ஏற்கனவே உள்ள மத்திய சட்டத்திற்கு முரணாகவோ, மாநில உயர் நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அதிகாரங்களை மீறும் வகையிலோ இருக்கும்போது மட்டுமே, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 254 இன் கீழ், அந்த மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப முடியும்.' என்று தமிழக அரசின் சார்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இவ்வழக்கு விசாரணையை வரு்ம் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்

ABOUT THE AUTHOR

...view details