டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த அமலாக்கத்துறையின் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை தகுதி நீக்கம் செய்யவோ, அல்லது முதலமைச்சராக தொடரக் கூடாது என உத்தரவிடவோ முடியுமா என்பதில் நீதிமன்றத்திற்கு சந்தேகம் உள்ளதாக நீதிபதி சஞ்சீவ் கன்னா தெரிவித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மட்டுமின்றி மூன்று மாதத்திற்கும் மேலாக சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
பிரதிநிதித்துவ சட்டத்தின் 19வது பிரிவின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்வதற்கான காரணம் என்ன என்பது உள்ளிட்ட கேள்விகள் நீதிமன்றத்திற்கு உள்ளதகாவும் அதன்படி வழக்கை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரைப்பதாகவும் நீதிபதி சஞ்சீவ் கன்னா தெரிவித்தார்.
மேலும், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது நடவடிக்கைக்கு அனுமதிக்க முடியாது என்றும் அதேநேரம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் நீதிபதி கூறினார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.