புதுடெல்லி:நீட் இளநிலை தேர்வு 2024 -ஐ ரத்து செய்து, மறுதேர்வு நடத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வின் முன், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற இந்த விசாரணையின்போது மனுதாரர்கள் தரப்பு, என்டிஏ உள்ளிட்ட எதிர்தரப்பு என அனைத்து தரப்பினரின் வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதிகள், அவர்களுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு என்டிஏ மற்றும் மனுதாரர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, நீட் இளநிலை தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்களை தேசிய தேர்வு முகமை தமது இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும், இந்த மதிப்பெண் விவரங்கள் மாணவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மற்றும் நகரங்கள் வாரியாக இருக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி அமர்வு அதிரடியாக உத்தரவிட்டது ‘
அத்துடன் மதிப்பெண் விவரங்களை இணையத்தில் வெளியிடும்போது மாணவர்களின் முக அடையாளம் மறைக்கப்பட வேண்டும் என்றும் தங்களது உத்தரவில் குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜுலை 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
முன்னதாக, ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் புதிதாக ஒரேயொரு நபருக்கு மட்டும் தேர்வுக்கு விண்ணப்பிக்க சிறப்பு அனுமதி அளித்திருந்த நிலையில், 15 ஆயிரம் புதிய விண்ணப்பங்களுக்கு எப்படி அனுமதி அளிக்கப்பட்டது? என்று தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
இதற்கு, 'சில விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த முகவரியை அடிப்படையாகக் கொண்டு, தேர்வு மையத்தை மாற்றியுள்ளனர்.குறிப்பிட்ட சிறிது நேரத்துக்கு அளிக்கப்பட்டிருந்த இந்த வாய்ப்பை பயன்படுத்தி, எத்தனை பேர் தங்களின் தேர்வு மையத்தை மாற்றியுள்ளனர் என்பதை துல்லியமாக கண்டறிவது சவாலான பணி. அதை நாங்கள் ஒருபோதும் அறிய முடியாது. கணினி வழியிலும் இதுவரை இதுகுறித்த தகவல்களை பெற முடியவில்லை" என்று என்டிஏ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
விண்ணப்பத்தில் திருத்தம் என்ற பேரில், குவஹாத்தியை சேர்ந்த ஒரு விண்ணப்பதாரர், லக்னெளவை தேர்வு மையமாக தெரிவு செய்ய முடியும். விண்ணப்பதாரர்களுக்கான தேர்வு மையத்தை என்டிஏ மட்டுமே கணினி முறையில் ஒதுக்கீடு செய்ய முடியும் எனும்போது, குறிப்பிட்ட விண்ணப்பதாரர்கள் தங்களின் தேர்வு மையத்தை எப்படி மாற்றிக் கொண்டார்கள்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதையும் படிங்க: நீட் தேர்வை ரத்து செய்யணுமா?- அப்போ இதை செஞ்சே ஆகணும்! - மனுதாரர்களிடம் உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்