டெல்லி:சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அவருக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறை சார்பில் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்ட வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராகவும், நிவாரணம் கோரியும் செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜியின் மனு நீதிபதிகள் ஏஎஸ் ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அமலாக்கத்துறை சார்பில் ஆஜராகும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வேறு வழக்கில் ஆஜரானதால் இந்த வழக்கை ஒத்திவைக்கக் கோரி அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, உஜ்ஜால் புய்யான் தலைமையிலான அமர்வு இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
முன்னதாக, செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மனு, கடந்த மே 6ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறையின் தரப்பில், இந்த விவகாரத்தில் விரிவான வாதங்களை முன்வைக்க அவகாசம் கோரப்பட்டிருந்தது. இதையடுத்து, வழக்கு விசாரணை மே 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த புதன்கிழமை விசாரணையின் போது அமலாக்கத்துறையின் சார்பில் ஆஜராகும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வேறொரு வழக்கில் ஆஜரானதால் இந்த வழக்கு விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் இன்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து இந்த வழக்கை ஜூலை 10க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இந்த வழக்கு விசாரணையை நாளை (மே.17) மீண்டும் நடத்த வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் அமலாக்கத்துறை தரப்பு வாதங்களைக் கேட்காமல் வழக்கு விசாரணையை நடத்த முடியாது என்று தெரிவித்தனர். மே 18ஆம் தேதியில் இருந்து ஜூலை 7ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றத்தில் கோடை கோடை விடுமுறை விடப்படுவதால், கோடை விடுமுறை முடிந்து ஜூலை 10ஆம் தேதி செந்தில் பாலாஜியின் மனு மீதான விசாரணை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கோவிஷீல்டு தடுப்பூசியால் மிக மோசமான பக்கவிளைவு ஏற்பட வாய்ப்பு! ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் அதிர்ச்சி தகவல்! - Covishield Vaccine