மால்டா (மேற்கு வங்கம்):காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தியின் கார் மீது மேற்கு வங்கம் மாநிலம் மால்டா பகுதியில் மர்ம நபர்கள் கல்வீசியதில் காரின் கண்ணாடி உடைந்ததாக கூறப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி கடந்த ஆண்டு கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்தியாவின் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் பாரத் ஜோடோ யாத்திரையின் இரண்டாவது கட்டமாக இந்தியாவின் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி மணிப்பூரில் இருந்து மகாராஷ்டிரா வரை பாரத் நியாய யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் இருந்து துவங்குவதாக இருந்த இந்த யாத்திரை அனுமதி கிடைக்காததால் தவுபலில் இருந்து ஜனவரி 14ஆம் தேதி துவங்கியது. நியாய யாத்திரை அசாமில் நுழைந்ததில் இருந்து பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டது. நகோன் மாவட்டத்தில் யாத்திரை நுழைந்த போது பாஜகவினர் திரண்டு எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பினர்.
மேலும், ஜனவரி 22ஆம் தேதி நகோன் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற வைஷ்ணவ துறவியான ஸ்ரீமந்த சங்கர் தேவ் பிறந்த ஊரானா பட்டதிரவா செல்ல ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனை அடுத்து ராகுல் காந்தியின் யாத்திரை அசாமின் கவுகாத்தி நகருக்குள் நுழைந்த போது தடுப்புகள் அமைக்கப்பட்டு யாத்திரை தடுக்கப்பட்டது.