மேற்கு சாம்பரன்:பிகாரின் பெட்டியா நகரில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவன், சக மாணவனை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளியில் பேனா தொடர்பாக இரு மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு சண்டையாக மாறியது. அப்போது ஆத்திரமடைந்த மாணவன், சக மாணவனை கத்தியால் தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர். பெட்டியா நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துர்காபாக் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. படுகாயமடைந்த மாணவர், பெட்டியா அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக சதார் காவல் துறை அதிகாரி விவேக் தீப் மேலும் கூறுகையில், "கத்தியால் குத்திய மாணவன் தன்னிடம் பேனாவைக் கடனாகக் கேட்டதாகவும், பேனாவைத் தர மறுத்ததால் தாக்கியதாகவும் காயமடைந்த மாணவர் தெரிவித்துள்ளார். அந்த வழியே சென்ற பள்ளி ஆசிரியர் அபிநந்தன் திவேதி இந்த சம்பவத்தைப் பார்த்து, காயமடைந்த மாணவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். காயமடைந்த மாணவர் சுப்ரியா சாலையில் உள்ள சாந்தி நகரில் வசிப்பவர்.
இதையும் படிங்க:"தமிழகத்தில் எந்த மர்ம காய்ச்சலும் இல்லை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி!
கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய மாணவர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி ஆசிரியர்கள் நேற்று (செப்டம்பர் 23) இந்த பிரச்சினையை தீவிரமாக எடுத்துக் கொண்டிருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது. பள்ளியில் ஏற்பட்ட தகராறு குறித்து வகுப்பு ஆசிரியரிடம் தெரிவித்ததாகவும், ஆனால் ஆசிரியர் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று காயமடைந்த மாணவர் கூறியுள்ளார்." என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக முகேஷ் என்ற பள்ளி ஆசிரியர் கூறுகையில், "துர்கா கோவில் அருகே மாணவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். பள்ளி நுழைவு வாயில் அருகே அவர் கத்தியால் குத்தப்படவில்லை. சக ஆசிரியரான அபிநந்தன் திவிவேதி எனக்கு போன் செய்ததும் அங்கு சென்று பார்த்தேன்.
அப்போது, மாணவன் காயமடைந்து கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். மாணவர் புகார் அளித்தாரா இல்லையா என்பது தெரியவில்லை" என்றார். பேனா தரவில்லை என்பதற்காக தன்னுடன் பயிலும் சக மாணவனை மற்றொரு மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.