தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீட்டில் உடன்பாடு! எந்தெந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்? - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

மகாராஷ்டிராவில் நீண்ட இழுபறிக்கு பின்னர் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டு உள்ளது. அதன்படி காங்கிரஸ் 17 இடங்களிலும், சிவ சேனா உத்தவ் அணி 21 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் அணி 10 இடங்களிலும் போட்டியிட திட்டமிட்டுள்ளன.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 9, 2024, 3:50 PM IST

Updated : Apr 10, 2024, 11:41 AM IST

மும்பை :மக்களவை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை அடைந்து உள்ளது. மேலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏறத்தாழ தொகுதி பங்கீடு நிறைவு செய்யப்பட்ட நிலையில் பிரசார பணிகள் தீவிரமடைந்து உள்ளன.

அதேநேரம், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியை பொறுத்தவரை பல்வேறு மாநிலங்களில் தொகுதி பங்கீடு இழுபறியில் நீடித்து வருகிறது. மகாராஷ்டிராவை பொறுத்தவரை இந்தியா கூட்டணியில் சிவசேனா உத்தவ் அணி, தேசியவாத காங்கிரஸ் கட்சி சரத் பவார் அணி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளன.

இந்த 3 கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு செய்வதில் குளறுபடி நீடித்து வந்த நிலையில், ஒருவழியாக வெற்றிகரமாக தொகுதி பங்கீடு நடந்து முடிந்துள்ளது. அதாவது மகாராஷ்டிராவில் மொத்தம் 48 மக்களவை தொகுதிகள் உள்ளன. அதில் 21 இடங்களில் சிவசேனா உத்தவ் அணி போட்டியிடுகிறது.

காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளிலும், மீதமுள்ள 10 தொகுதிகளில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார் அணி போட்டியிடுவதாகவும் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டியுள்ளது. உத்தர பிரதேசத்திற்கு அடுத்து அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா காணப்படுகிறது.

அதன் காரணமாக மகாராஷ்டிராவை கைப்பற்ற தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக, ஒன்றிணைந்த சிவ சேனா கட்சி முறையே 23 மற்றும் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிராவில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் மே 20 வரை ஐந்து கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி ராம்டெக், நாக்பூர், பண்டாரா-கோண்டியா, கட்சிரோலி-சிமூர் மற்றும் சந்திராபூர் ஆகிய இடங்களில் தேர்தல் நடைபெறுகிறது. தொடர்ந்து புல்தானா, அகோலா, அமராவதி, வார்தா, யவத்மால்-வாஷிம், ஹிங்கோலி, நாந்தேட் மற்றும் பர்பானி ஆகிய இடங்களில் ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ராய்காட், பாராமதி, உஸ்மானாபாத், லத்தூர், சோலாப்பூர், மாதா, சாங்லி, சதாரா, ரத்னகிரி-சிந்துதுர்க், மற்றும் கோலாப்பூர் ஆகிய தொகுதிகளில் மே 7ஆம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நான்காவது கட்டமாக நந்தூர்பார், ஜல்கான், ராவர், ஜல்னா, சத்ரபதி சம்பாஜிநகர், மாவல், புனே, ஷிரூர், அகமதுநகர், பீட் மற்றும் ஷிர்டி ஆகிய இடங்களில் மே 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

கடைசியாக துலே, டிண்டோரி, நாசிக், பால்கர், கல்யாண், தானே, மும்பை வடக்கு, மும்பை வடமேற்கு, மும்பை வடகிழக்கு, மும்பை வடக்கு-மத்திய, மும்பை தெற்கு மற்றும் மும்பை தெற்கு-மத்திய பகுதிகளுக்கு மே 20ஆம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இதையும் படிங்க :பாதுகாப்பு அச்சுறுத்தல் - தலைமை தேர்தல் ஆணையருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு- மத்திய அரசு உத்தரவு! - Lok Sabha Election 2024

Last Updated : Apr 10, 2024, 11:41 AM IST

ABOUT THE AUTHOR

...view details