டெல்லி:2019ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் அமலில் இருந்த பிரிவு 370-ஐ ரத்து செய்தது, மத்திய அரசு. அதன்பின், ஜம்மு மற்றும் காஷ்மீரை இரண்டாகப் பிரித்தது. மத்திய அரசு பிரிவு 370-ஐ ரத்து செய்தது தவறு என உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், பிரிவு 370-ஐ ரத்து செய்தது செல்லும் என 2023 டிசம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஸ்ரீநகர் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ஜம்மு காஷ்மீரில் பிரிவு 370 ரத்து செய்த பின்புதான் இங்கு சுதந்திரம் கிடைத்து சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிகிறது என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில், மகாராஷ்டிராவின் கோலாப்பூர் கல்லூரியில் பணிபுரியும் காஷ்மீர் பேராசிரியர் ஜாவேத் அகமது ஹசாம் என்பவர், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருக்கும் வாட்ஸ் ஆப் குரூப்பில், ஆகஸ்ட் 5 ஜம்மு காஷ்மீரின் கறுப்பு தினம் என்றும், ஆகஸ்ட் 14 பாகிஸ்தான் சுதந்திர தினம் என்றும் கருத்து பதிவிட்டு இருந்தார்.
இது தொடர்பாக மகாராஷ்டிரா காவல்துறை சார்பாக இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 153-ஏ கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், பேராசிரியர் தரப்பில் தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணை செய்த மும்பை நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து, பேராசிரியர் ஜாவேத் அகமது ஹசாம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தார்.