கன்னோஜ் :நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு முதல் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்றது. அதிகபட்சமாக 80 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் கன்னோஜ் மக்களவை தொகுதியில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனுத் தாக்கலின் போது சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள் பேராசிரியர் ராம் கோபால், முன்னாள் கேபினட் அமைச்சர் உஷா வர்மா, அமிதாப் பாஜ்பே உள்ளிடோர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடையே பேசிய அகிலேஷ் யாதவ், வெறுப்பு அரசியலுக்கு முடிவு கட்டும் இடமாக கன்னோஜ் அமையும் என்று தெரிவித்தார். தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக முடிவு எடுப்பதில் ஏற்பட்ட தாமதம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அகிலேஷ் யாதவ் இரும்பு சூடாக இருக்கும் போது தான் சுத்தியலை அடிக்க முடியும் என்று தெரிவித்தார்.